வாடகை காரில் வந்து ஷோரூமில் சினிமா பானியில் பைக் திருட்டு- ஒட்டி பார்ப்பதாக கூறி வாலிபர் மாயம்
- ஊழியர்கள் பைக் வாங்க வந்தவரிடம் எந்த ஒரு அடையாள அட்டையும் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது.
- பைக்கை நூதன முறையில் திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை:
புதிய பைக்கை ஓட்டி பார்ப்பதாக கூறி திருடப்படும் காட்சிகள் சினிமாக்களில் இடம் பெற்றுள்ளது. அதே போல திருவண்ணாமலையிலும் நூதன திருட்டு அரங்கேறி உள்ளது.
திருவண்ணாமலை கிரிவலப் பாதை காஞ்சி ரோட்டில் தனியார் பைக் ஷோரூம் செயல்பட்டு வருகிறது.
இந்த ஷோரூமிற்கு நேற்று முன்தினம் இரவு புதுச்சேரியில் இருந்து டிப்-டாப் உடையில் வாலிபர் ஒருவர் காரில் வந்து இறங்கினார். அங்கிருந்த ஊழியர்களிடம் பைக் வாங்க வந்துள்ளேன் என்று கூறினார்.
இதனை நம்பிய ஊழியர்கள் அந்த நபருக்கு புது பைக்குகளை காட்டினர். இதில் ஒரு புது பைக் பிடித்துப் போகவே அதனை ஓட்டி பார்ப்பதாக அந்த நபர் கூறினார். இதனால் ஊழியர்கள் சுமார் ரூ.2.50 லட்சம் மதிப்புள்ள பைக்கை அவரிடம் கொடுத்தனர்.
ஆனால் ஊழியர்கள் பைக் வாங்க வந்தவரிடம் எந்த ஒரு அடையாள அட்டையும் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த நபர் பைக்கை ஓட்டி ஒத்திகை பார்ப்பதற்காக பைக்கை வெளியே ஓட்டி சென்றார். நீண்ட நேரம் ஆகியும் அந்த நபர் திரும்பி வரவில்லை . இதனால் ஷோரூம் ஊழியர்கள் பைக்கை எடுத்து சென்ற நபரை தேடிச் சென்றனர்.
பின்னர் இது குறித்து காரில் இருந்த டிரைவரிடம் விசாரித்தனர். அப்போது அந்த வாடகை கார் என்றும், காரில் வந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்ற தகவல் தனக்கு தெரியாது என்று டிரைவர் கூறினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள் என டிரைவரிடம் கேட்டனர்.
அதற்கு அவர் நான் புதுச்சேரியில் இருந்து வருகிறேன் எனக்கு இந்த வாலிபர் யார் என தெரியாது அவரிடம் செல்போன் கூட இல்லை எனக்கு ஒரு ஆட்டோ டிரைவர் போன் செய்து திருவண்ணாமலைக்கு சவாரி உள்ளது என கூறி இவரை எனது காரில் அனுப்பி வைத்தார். எனக்கு அந்த நபர் கார் வாடகை கூட கொடுக்கவில்லை என கூறினார்.
இதனால் செய்வதறியாமல் தவித்த ஊழியர்கள் இது குறித்து ஷோரூம் உரிமையாளரிடம் நடந்த விவரங்களை பற்றி தெரிவித்தார்.
மேலும் திருவண்ணாமலை தாலுகா போலீசில் தகவல் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரியில் இருந்து திருவண்ணாமலைக்கு காரில் வந்து பைக்கை நூதன முறையில் திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.