2026 தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை- ஆலோசனை கூட்டத்தில் ஈபிஎஸ் தெரிவித்ததாக தகவல்
- காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதிகளை சேர்ந்த முக்கிய பொறுப் பாளர்கள் பங்கேற்றனர்.
- இளைஞர்களை அதிகளவில் சேர்த்து அவர்களுக்கு வாய்ப்பளிக்க ஈபிஎஸ் அறிவுறுத்தியதாக தகவல்.
பாராளுமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்ததை அடுத்து பாராளுமன்ற தொகுதி வாரியாக கட்சியினர் மாவட்ட செயலாளர்கள் உள்பட முக்கிய நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி இன்று முதல் ஆலோசனை நடத்தினார்.
அதன்படி, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இன்று மாலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில், காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதிகளை சேர்ந்த முக்கிய பொறுப் பாளர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தின்போது, 2026 தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவைத் தேர்தல் தோல்விக்கு கூட்டணி பலம் இல்லாததே காரணம் என நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் முறையிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், மகளிர் உரிமை தொகை, விடியல் பயணத் திட்டம் போன்ற திட்டங்களும் அதிமுகவின் தோல்விக்கு காரணம் என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கட்சியில் தற்போதைய நிலையே தொடரட்டும், புதிதாக யாரையும் கட்சியில் சேர்க்க வேண்டாம் என சில நிர்வாகிகள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
கூட்டத்தில் நிர்வாகிகள் பேசியபோது எடப்பாடி பழனிசாமி அமைதியாக கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும், எங்கெல்லாம் பிரச்சினை உள்ளதோ, அவைகளை சரி செய்ய மாவட்ட செயலாளர்களுக்கு, ஈபிஎஸ் அறிவுறுத்தியதாக தெரியவந்துள்ளது.
இளைஞர்களை அதிகளவில் சேர்த்து அவர்களுக்கு வாய்ப்பளிக்க ஈபிஎஸ் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
இருப்பினும், இன்றைய கூட்டத்தில் பிரிந்த சென்ற தலைவர்களை இணைப்பது குறித்து பேசப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.