தவறான தகவலை பரப்புகின்றனர்: பெண்ணின் வயிற்றில் பஞ்சு வைக்கவில்லை- டாக்டர் விளக்கம்
- குழந்தை பெற்ற பின்பு தாமரைச்செல்விக்கு ரத்த கசிவு இருந்தது. இதற்கு சிகிச்சை அளித்து வந்தோம்.
- ரத்த கசிவு நீடித்ததால் மீண்டும் இங்கு வந்த அவருக்கு சோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்து வருகிறார்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கோதைநாச்சியார்புரத்தை சேர்ந்தவர் சிரஞ்சீவி, தொழிலாளி. இவரது மனைவி தாமரைச்செல்வி (வயது 25). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான்.
இந்நிலையில் மீண்டும் கர்ப்பமான தாமரைச் செல்வி பிரசவத்திற்காக கடந்த 6-ந்தேதி ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்து வமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு ஆபரேசன் தாமரைச் செல்விக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் பிரசவம் முடிந்த பின்பு அவருக்கு அடிக்கடி ரத்த கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அவரை ஆஸ்பத்திரியில் தொடர்ந்து இருக்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்தினர். ஆனால் அதை கேட்காமல் உறவினர்கள் கடந்த 9-ந்தேதி தாமரைச் செல்வியை வீட்டிற்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. வீட்டிற்கு சென்ற பின்பும் அவருக்கு ரத்தகசிவு தொடர்ந்து நீடித்ததால் தாமரைச்செல்வி உடல்நலம் பாதிக்கப்பட்டார்.
இதையடுத்து உறவினர்கள் அவரை அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு விவரம் கேட்ட டாக்டர்கள், பிரசவம் பார்த்த ஆஸ்பத்திரிக்கே செல்லுமாறு கூறினர். இதனை தொடர்ந்து தாமரைச்செல்வி மீண்டும் ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது தாமரைச் செல்விக்கு ஒரு குறிப்பிட்ட பகுதியில் ரத்தம் உறைந்த காரணத்தால் பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் மீண்டும் சிகிச்சை அளித்தனர். இதனை தொடர்ந்து அவர் தற்போது ஆஸ்பத்திரியில் உடல்நலம் தேறி வருகிறார்.
இதற்கிடையே குழந்தை பெற்ற பெண்ணில் வயிற்றில் கவனக்குறைவாக பஞ்சு வைத்ததாக தகவல் பரவியது. இதற்கு ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனை மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மாரியப்பன் "மாலைமலர்" நிருபரிடம் கூறியதாவது:-
குழந்தை பெற்ற பின்பு தாமரைச்செல்விக்கு ரத்த கசிவு இருந்தது. இதற்கு சிகிச்சை அளித்து வந்தோம். ஆனால் உறவினர்கள் அவரை முன்கூட்டியே அழைத்து சென்றுவிட்டனர். ரத்த கசிவு நீடித்ததால் மீண்டும் இங்கு வந்த அவருக்கு சோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்து வருகிறார்.
வயிற்றில் மருத்துவர்கள் கவனக்குறைவாக பஞ்சு வைத்ததாக வதந்தி பரவி இருப்பது வருத்தமடைய செய்கிறது. அது முற்றிலும் தவறான தகவல்.
இவ்வாறு அவர் கூறினார்.