தமிழ்நாடு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: அதிகாரிகள் மீது கொலை வழக்கு தொடர வேண்டும் - சென்னை ஐகோர்ட்

Published On 2024-07-01 14:29 GMT   |   Update On 2024-07-01 14:29 GMT
  • தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகள் எவரும் இதுவரை வருந்தவில்லை.
  • துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கில் விசாரணை நீதிமன்றத்தில் கூடுதல் இறுதி அறிக்கை தாக்கல் செய்யபட்டுள்ளது.

தூத்துக்குடியில் கடந்த ஆட்சிக் காலத்தில் 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி நடந்த போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் திருமதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

அந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது. அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்த 13 நபர்களின் குடும்பத்தினர்களுக்கு ஏற்கனவே வழங்கிய நிதியோடு, கூடுதலாக, தலா ரூ. 5 லட்சம் வீதம், 65 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த தேசிய மனித உரிமை ஆணையம் பின்னர் அந்த வழக்கை முடித்து வைத்தது.

இந்நிலையில் தேசிய மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையில், மாநில மனித உரிமை ஆணையமும், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையமும் விசாரித்த வழக்கை மீண்டும் விசாரிக்க முடியாது என துணை காவல் கண்காணிப்பாளர் தரப்பு வாதம் முன்வைத்தது.

இந்த வாத்தை ஹென்றி திபேன் தரப்பு ஏற்க மறுத்தது. மனித உரிமை ஆணைய சட்டப்படி மனித உரிமை ஆணையங்கள் பிறப்பிக்கும் உத்தரவை மறு ஆய்வு செய்ய முடியும் என்று மனுதாரர் தெரிவித்தார்.

இதனையடுத்து சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கில் விசாரணை நீதிமன்றத்தில் கூடுதல் இறுதி அறிக்கை தாக்கல் செய்யபட்டுள்ளது என்றும் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும் என்றும் மனுதாரர் இந்த வழக்கை தாக்கல் செய்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று ஆட்சேபம் தெரிவித்தார்.

இதனையடுத்து கருது தெரிவித்த நீதிபதி, "தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகள் எவரும் இதுவரை வருந்தவில்லை" அவர்களுக்கு எதிராக கொலை வழக்கு தொடரப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இறுதியாக எதிர் மனுதாரரின் ஆட்சேபத்திற்கு பதில் அளிக்கும் படி மனுதாரருக்கு உத்தரவிட்டு இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 15 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

Tags:    

Similar News