தமிழ்நாடு

பட்டாசு ஆலை வெடிவிபத்து

பட்டாசு ஆலை விபத்துகளை தடுக்க 3 மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு

Published On 2024-02-19 03:47 GMT   |   Update On 2024-02-19 03:47 GMT
  • தமிழகத்தில் பட்டாசு ஆலைகள் மற்றும் குடோன்களில் ஏற்படும் தொடர் விபத்துகள் கவலையளிக்கின்றன.
  • பொதுவாகவே பட்டாசு ஆலைகளின் பெரிய குடோன்களுக்கு மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகம்தான் அனுமதியளிக்கிறது.

திருச்சி:

திருச்சி சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் கடந்த 15-ந் தேதி தொடங்கி தீயணைப்புத் துறையினருக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. இதில் திருச்சி மத்திய மண்டலம் உள்ளிட்ட மாநிலம் முழுவதுமுள்ள 4 மண்டலங்களைச் சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நேற்று நடந்த இறுதிப் போட்டியில் வடக்கு மண்டல அதிக புள்ளிகளைப் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. திருச்சி மத்திய மண்டலம் 2 ஆம் இடத்தையும், தெற்கு மண்டலம் 3 ஆவது இடத்தையும் பெற்றன.

பரிசளிப்பு விழாவில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை இயக்குநர் ஆபாஷ்குமார் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் தீயணைப்பு நிலையங்களில் மீட்புப் பணிகளுக்காக பைபர் படகுகள், ரோபோக்கள், மற்றும் நவீன சாதனங்களை தேவைக்கேற்ப கொள்முதல் செய்து பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதுடன் உரிய மாற்றங்களும் செய்யப்படும். சென்னை, மற்றும் தென் மாநிலங்களில் வெள்ளப் பாதிப்புகளின்போது தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினரின் பணி மகத்தானது எனத் தமிழக முதல்வரே பாராட்டியிருப்பது பெருமை.

அதே நேரம் தமிழகத்தில் பட்டாசு ஆலைகள் மற்றும் குடோன்களில் ஏற்படும் தொடர் விபத்துகள் கவலையளிக்கின்றன. இதுதொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டங்களின்போது தலைமைச் செயலர் ஏராளமான அறிவுரைகளைக் கூறியுள்ளார்.

அந்த வகையில் விபத்துகளைத் தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகங்களுடன் இணைந்து, பட்டாசு ஆலைகள் மற்றும் குடோன்களில் 3 மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்யப்படும். மேலும் விபத்துகளைத் தடுக்க 6 மாதங்களுக்குள் புதிய விதிமுறைகள் வரையறுக்கப்படும்.

பொதுவாகவே பட்டாசு ஆலைகளின் பெரிய குடோன்களுக்கு மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகம்தான் அனுமதியளிக்கிறது. தீயணைப்புத் துறை சார்பில் சிறிய குடோன்கள் மற்றும் ஆலைகளுக்குத்தான் அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் விபத்துகள் என வரும்போது தீயணைப்பு மீட்புத் துறைக்கே நெருக்கடி ஏற்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் திருச்சி மத்திய மண்டல காவல் துறைத் தலைவர் ஜி. கார்த்திகேயன், மாநகரக் காவல் ஆணையர் ந. காமினி, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மத்திய மண்டலத் துணை இயக்குநர் பி. குமார், மாவட்ட அலுவலர் வி. ஜெகதீசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News