'டிக்கெட் மறுத்த விவகாரம்': 22 அரசுப் பேருந்துகளுக்கு அபராதம் விதித்த காவல்துறை
- பேருந்தில் ஏறிய ஒரு காவலர் டிக்கெட் எடுக்க முடியாது என்று ரகளையில் ஈடுபட்ட வீடியோ அண்மையில் வைரலானது.
- சென்னையில் 'நோ பார்க்கிங்'-ல் நிறுத்தப்பட்டிருந்த 22 அரசுப் பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் பேருந்தில் ஏறிய ஒரு காவலர் டிக்கெட் எடுக்க முடியாது என்று ரகளையில் ஈடுபட்ட வீடியோ அண்மையில் வைரலானது.
அந்த வீடியோவில், அரசு பஸ்சில் அரசு பணியில் உள்ளவர்கள் எல்லாருக்குமே டிக்கெட் கிடையாது. நாங்களும் அரசு வேலை பார்ப்பவர்கள் தான். எங்களுக்கும் டிக்கெட் கிடையாது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனைத்தொடர்ந்து அரசு பஸ்சில் போலீஸ்காரர்கள் பயணிக்க வாரண்ட் வேண்டும். இல்லாத பட்சத்தில் டிக்கெட் எடுக்க வேண்டும் என கண்டக்டர் கூறியுள்ளார்.
ஆனால் அந்த போலீஸ்காரர் டிக்கெட் எடுக்க மறுத்ததோடு, எல்லோருக்கும் ஒரே விதிமுறைகளை கொண்டு வாருங்கள். போக்குவரத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மட்டும் இலவசம். நாங்களும் அரசு வேலை பார்ப்பவர்கள் தான். எங்களையும் இலவசமாக நீங்கள் பயணிக்க விட வேண்டும் என கூறி தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து இது தொடர்பாக போக்குவரத்து துறை சார்பில் விளக்கம் அளித்துள்ளது. அதில், "காவலர்கள் பேருந்தில் பயணிக்கும் போது கட்டாயம் டிக்கெட் எடுக்க வேண்டும். வாரண்ட் இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவர்களுக்கு கட்டணமில்லா பயணம் அனுமதிக்கப்படுகிறது. அந்தத் தொகையையும் போக்குவரத்துத் துறை அரசிடம் திரும்பப் பெற்றுக் கொள்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று நாங்குநேரியில் நடைபெற்ற சம்பவத்தின்போது பேருந்து நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் 'நோ பார்க்கிங்'-ல் நிறுத்தப்பட்டிருந்த 22 அரசுப் பேருந்துகளுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.
அரசுப் பேருந்தில் டிக்கெட் எடுக்காமல் அரசு போக்குவரத்து நடத்துநருடன் வாக்குவாதம் செய்த, காவலர் ஆறுமுகபாண்டி மீது நடவடிக்கை எடுக்க போக்குவரத்துத்துறை பரிந்துரை செய்த நிலையில், தற்போது 'நோ பார்க்கிங்' பகுதியில் நிறுத்தப்படும் அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கையை போக்குவரத்து காவல் துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
இந்த நடவடிக்கைகளால் காவல்துறைக்கும் போக்குவரத்துத்துறைக்கும் இடையே மோதல் போக்கு உருவாகும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.