புலிகள் கணக்கெடுப்பு இன்று தொடக்கம்: மணிமுத்தாறு, பாபநாசம் வனத்துறை சோதனை சாவடிகள் 27-ந்தேதி வரை மூடல்
- ஆண்டு தோறும் புலிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது.
- பயிற்சி முகாம் அம்பை கோட்ட துணை இயக்குனர் இளையராஜா தலைமையில் முண்டந்துறையில் இன்று காலை தொடங்கியது.
கல்லிடைக்குறிச்சி:
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் திருக்குறுங்குடி முதல் கடையம் வரை 895 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது.
பல்லுயிர் பெருக்கத்திற்கு புகழ் பெற்ற இக்காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, கரடி, சிங்கவால் குரங்கு, செந்நாய்கள், கடமான் உள்ளிட்ட அரிய வகை விலங்குகள், மூலிகை தாவரங்கள் உள்ளது.
இங்கு ஆண்டு தோறும் புலிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. இந்த ஆண்டு அம்பை கோட்டத்திற்கு உட்பட்ட அம்பை, பாபநாசம், முண்டந்துறை, கடையம் உள்ளிட்ட வனச் சரகங்களில் இன்று முதல் புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கி வருகிற 27-ந்தேதி வரை நடைபெறுகிறது.
இதனையொட்டி புலிகள் கணக்கெடுப்பாளர்களுக்கான பயிற்சி முகாம் அம்பை கோட்ட துணை இயக்குனர் இளையராஜா தலைமையில் முண்டந்துறையில் இன்று காலை தொடங்கியது. இந்த பயிற்சி முகாமில் 100-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
இதைத்தொடர்ந்து பயிற்சி காலையில் முடிந்தவுடன் உடனடியாக மதியமே கணக்கெடுக்கும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட தொடங்கினர். தொடர்ந்து முண்டந்துறை அருகே நாளை (புதன்கிழமை) கணக்கெடுப்பு பணி நடக்கிறது.
இதனையொட்டி பாபநாசம், மணிமுத்தாறு சோதனை சாவடிகள் தற்காலிகமாக மூடப்படுகிறது. இதனால் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை, சொரிமுத்து அய்யனார் கோவில் ஆகிய இடங்களுக்கு இன்று முதல் பொதுமக்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதனை அறியாமல் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.