வண்டலூர் உயிரியல் பூங்காவில் பெண் ஊழியரின் அழைப்பை ஏற்று கூண்டுக்குள் சென்ற புலிகள்
- கூண்டுக்கு வெளியே சுற்றி திரியும் 2 புலிகளும் பெண் ஊழியரின் அன்பு கட்டளையை ஏற்று கூண்டுக்குள் செல்கின்றன.
- புலிகளை பெண் ஊழியர் ஒருவர் புலிகளின் பெயரை சொல்லி தேவா, மாலா என்று அழைக்கிறார்.
வண்டலூர்:
சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு கோடை விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவதால் வண்டலூர் உயிரியல் பூங்காவில் கூட்டம் அலை மோதுகிறது.
மேலும் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள் மற்றும் பறவைகள் கோடை வெயிலை சமாளிப்பதற்கு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.
இங்குள்ள பறவைகளுக்கு நீர்ச்சத்து உள்ள பழங்கள் வழங்கப்படுகின்றன. மேலும் பறவைகள் உள்ள கூண்டுகளை சுற்றி சணல் கோணி மூலம் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அந்த கோணிகளில் 2 மணி நேரத்துக்கு ஒருமுறை தண்ணீர் பீச்சி அடிக்கப்படுகிறது. இதனால் கூண்டுக்குள் எப்போதும் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. கூண்டுகளின் மேல் தென்னை, பனை ஓலைகளும் போடப்பட்டு உள்ளன.
மேலும் விலங்குகள் குளிக்கும் இடத்தில் செயற்கை நீரூற்றுகளும் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு வழக்கத்தை விட அதிகமான தண்ணீர் திறந்து விடப்படுகிறது. யானை உள்ளிட்ட விலங்குகள் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள ஷவர்களில் குளியல் போடுகின்றன. குளியல் போட்டபடியே கரும்புகளை கடித்து சுவைக்கின்றன.
சிங்கம், புலி உள்ளிட்ட விலங்குகளுக்கு குளிர் சாதன பெட்டியில் வைக்கப் பட்ட இறைச்சி ஜில்லென வழங்கப்படுகிறது. மேலும் இங்குள்ள விலங்குகள் கோடையில் பாதுகாப்பாக இருக்க 2 மணி நேரத்திற்கு ஒருமுறை கால்நடை மருத்துவர்கள் கண்காணிக்கிறார்கள்.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் தேவா, மாலா ஆகிய 2 புலிகள் உள்ளன. இந்த புலிகள் கூண்டுக்குள்ளேயும், கூண்டுக்கு வெளியேயும் திரிகிறது. கூண்டுக்கு வெளியே சுற்றி திரியும் 2 புலிகளும் பெண் ஊழியரின் அன்பு கட்டளையை ஏற்று கூண்டுக்குள் செல்கின்றன.
கூண்டுக்கு வெளியே இருக்கும் புலிகளை பெண் ஊழியர் ஒருவர் புலிகளின் பெயரை சொல்லி தேவா, மாலா என்று அழைக்கிறார். அவர் கூப்பிட்டதும் அந்த புலிகள் அவரை திரும்பி பார்க்கின்றன. பின்னர் புலிகளை பார்த்து கூண்டுக்குள் போ என்று பெண் ஊழியர் சொல்கிறார். உடனே 2 புலிகளும் எழுந்து நட ந்து வந்து கூண்டுக்குள் செல்கின்றன. இதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கர்நாடகாவில் இருந்து சிங்கம் ஒன்று கொண்டு வரப்பட்டது. இந்த சிங்கத்தை 2 நாட்கள் கழித்து பொதுமக்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.