பிரம்மோற்சவ திருவிழா- தமிழகத்தில் இருந்து திருப்பதிக்கு 150 சிறப்பு பஸ்கள் இயக்கம்
- பிரம்மோற்சவ விழாவில் பிரதான நிகழ்வான கருட சேவை அக்டோபர் 8-ந் தேதி நடைபெற உள்ளது.
- திருப்பதிக்கு 30-ந் தேதி முதல் அக்டோபர் 13-ந் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்க உள்ளது.
சென்னை:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடத்தப்படும் விழாக்களில் பிரசித்தி பெற்ற விழாவான பிரம்மோற்சவம் வருகிற அக்டோபர் 4-ந் தேதி தொடங்கி அக்டோபர் 12-ந் தேதி வரை நடைபெற உள்ளது. பிரம்மோற்சவ விழாவில் பிரதான நிகழ்வான கருட சேவை அக்டோபர் 8-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள், திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் கலந்து கொள்வதற்கு வசதியாக தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகமானது சிறப்பு பஸ்களை இயக்க முன்வந்துள்ளது.
அதாவது, அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் திருப்பதிக்கு தினசரி 35 பஸ்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், திருப்பதி பிரம்மோற்சவத்தையொட்டி, வருகிற 30-ந் தேதி முதல் அக்டோபர் 13-ந் தேதி வரை தினசரி 150 கூடுதல் பஸ்களை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து இயக்குவதற்கு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் ஆந்திர அரசிடம் ஒப்புதல் பெற்றுள்ளது.
இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி பிரம்மோற்சவ திருவிழாவினை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், சென்னை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, காரைக்குடி, கும்பகோணம், தூத்துக்குடி மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்து திருப்பதிக்கு 30-ந் தேதி முதல் அக்டோபர் 13-ந் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்க உள்ளது.
மேற்கூறிய இடங்களிலிருந்து இயக்கப்படும் பஸ்களில் பயணம் மேற்கொள்ள www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் செல்போன் செயலி மூலம் முன்பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.