தமிழ்நாடு

பாராளுமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் மாற்றம்?

Published On 2024-05-18 09:31 GMT   |   Update On 2024-05-18 09:31 GMT
  • கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி ஒரு சில தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி 2-வது இடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளது.
  • மாவட்ட அளவிலும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படலாம்.

சென்னை:

தமிழகத்தில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி முறிந்ததை தொடர்ந்து, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க. தலைமையில் தனி கூட்டணியை அமைத்து பாராளுமன்ற தேர்தலை சந்தித்தார். பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இரட்டை இலக்க சதவீதத்தில் ஓட்டுகளை பெற வேண்டும், குறைந்த பட்சம் 5 முதல் 8 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் தமிழக பா.ஜ.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது.

இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் முடிவு தி.மு.க.வுக்கு சாதகமாக அமைந்தால் தமிழக பா.ஜ.க.வில் நிர்வாகிகள் மாற்றப்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அண்ணாமலைக்கும் நெருக்கடி உருவாகலாம் என்றும் கூறப்படுகிறது. எனவே பாராளுமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு தமிழக பா.ஜ.க. தலைவர் பதவியில் அண்ணாமலை நீடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது தொடர்பாக பா.ஜ.க. மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். பாராளுமன்ற தேர்தல் முடிவு சாதகமாக இல்லாவிட்டால் அண்ணாமலை தலைவர் பதவியை தக்க வைக்க போராட வேண்டி இருக்கும். அவர் தலைவர் பதவியை இழக்கவும் நேரிடலாம்.

அண்ணாமலை தனது செல்வாக்கை வளர்த்துக்கொள்ள தனிப்பட்ட முறையில் முயற்சி செய்தார். அ.தி.மு.க.வுடன் உறவை முறித்துகொண்ட அவர் பா.ஜ.க. மேலிடத்தின் கட்டளைக்கு உட்பட்டு தனது தலைமையில் கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலை சந்தித்தார். ஆனால் அவரால் தேர்தலில் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி ஒரு சில தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி 2-வது இடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் எந்த தொகுதியிலும் வெற்றி பெற வாய்ப்பு இல்லை. 2014-ம் ஆண்டு கோவை தொகுதியில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் 3 லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுகள் பெற்றிருந்தார். தற்போது அண்ணாமலைக்கு அந்த அளவுக்கு ஓட்டு கிடைக்குமா என்பது தெரியவில்லை. கோவையில் நிலைமை இப்படியென்றால் மற்ற தொகுதிகளில் நிலைமை என்னவாகும்?

தேர்தல் முடிவு வெளியான பிறகு தமிழக பா.ஜ.க.வில் புதிய பொறுப்பாளர்களை நியமிக்க அதிக வாய்ப்பு உள்ளது. தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அண்ணாமலை மற்றும் மாநில நிர்வாகிகள் மீது கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்கும். அதன்படி தலைவர் மற்றும் நிர்வாகிகள் மாற்றப்பட வாய்ப்பு உள்ளது. மாவட்ட அளவிலும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக மற்றொரு பா.ஜ.க. நிர்வாகி கூறுகையில், 'தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மாற்றப்படுவார் என்பது யூகத்தின் அடிப்படையிலான செய்தி. 2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் வரை தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை நீடிப்பார். இதில் எந்தவித மாற்றமும் இல்லை' என்றார்.

Tags:    

Similar News