எனக்கு மட்டுமல்ல, லட்சோபலட்சம் பேருக்கு தாயாய், தந்தையாய் இருந்தவர் கலைஞர்- மு.க.ஸ்டாலின்
- கலைஞர் எனும் தாய் புத்தகத்தில் கட்டுரை தொகுப்பின் தலைப்புகளே புத்தக தலைப்புகள் போன்றுள்ளன.
- இனம், மொழி, மாநில உரிமைகளுக்காக உழைப்பதே கலைஞருக்காக செலுத்தும் அஞ்சலி.
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு எழுதிய 'கலைஞர் எனும் தாய்' என்கிற புத்தக வெளியீடு விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது.
அமைச்சர் எ.வ.வேலு எழுதிய 'கலைஞர் எனும் தாய்' புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார் .
இந்த புத்தகத்தை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார்.
இந்நிலையில், கலைஞர் எனும் தாய் நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு பின்னர் உரையாற்றினார்.
அவர் உரையாற்றியதாவது:-
கலைஞரின் தாய் தங்களை எப்படி பேணி வளர்த்தார் என சிவாஜி, எம்ஜிஆர் ஆகியோர் கூறுவார்கள். பலருக்கும் தாய் போலவே செயலாற்றிய கலைஞரை தாய் என விளிப்பது சாலப் பொருத்தம்.
என் கண் அசைவை புரிந்து கொண்டு செயலாற்றுபவர் எ.வ.வேலு என கலைஞர் கூறுவார். இப்போது எனக்கும் அதே போன்ற செயல்மிக்க அமைச்சராக எ.வ.வேலு செயல்பட்டு வருகிறார். எத்தனை வேலை கொடுத்தாலும் சிறப்பாக செயல்படுத்தி முடிப்பவர் எ.வ.வேலு.
தாய் "தாய் காவியத்தை தமிழ் வடிவில் தீட்டிய கலைஞருக்கு தமிழோவியம் தீட்டியிருக்கிறார் அமைச்சர் எ.வ.வேலு. எனக்கு தந்தை மட்டுமல்ல, தாயுமாகவும் இருந்தவர் கலைஞர். எனக்கு மட்டுமல்ல, லட்சோபலட்சம் பேருக்கு தாயாய், தந்தையாய் இருந்தவர் கலைஞர்.
கலைஞர் எனும் தாய் புத்தகத்தில் கட்டுரை தொகுப்பின் தலைப்புகளே புத்தக தலைப்புகள் போன்றுள்ளன.
புத்தகத்தில் இடம்பெற்றுள்ள வரலாற்று சம்பவங்களை படித்தபோது எனக்கு வியப்பாக இருந்தது. கலைஞரின் வாழ்வில் நிகழ்ந்த முக்கிய அனுபவங்கள் அனைத்தும் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.
கலைஞரின் வரலாறு மட்டுமல்ல, கழகத்தின் வரலாறும் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இனம், மொழி, மாநில உரிமைகளுக்காக உழைப்பதே கலைஞருக்காக செலுத்தும் அஞ்சலி.
நிகழ்ச்சியில் பங்கேற்ற ரஜினிகாந்திற்கு நன்றி. என்னை விட வயதில் மூத்தவர் ரஜினி அவர் அறிவுரையை ஏற்கிறேன். பயப்பட வேண்டாம்.. நான் என்றும் கவனமாக இருப்பேன். நீங்கள் மனம் திறந்து பாராட்டியதற்கு நன்றி.
ரஜினிகாந்த், என்.ராம் உள்ளிட்டோரும் கலைஞரின் உடன் பிறப்புகள் தான்.
இவ்வாறு அவர் கூறினார்.