கனமழை எச்சரிக்கை: சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- மாண்டஸ் புயல் தீவிர புயலாக வலுவடைந்து மாமல்லபுரம் அருகே நாளை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- மரங்களின் அருகாமையில் நிற்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.
சென்னை:
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து புயலாக மாறி உள்ளது. மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் தீவிர புயலாக வலுவடைந்து மாமல்லபுரம் அருகே நாளை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, வட தமிழகம், புதுச்சேரிக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சென்னையில் மெரினா, பெசன்ட் நகர் போன்ற கடற்கரை பகுதிகளுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும், காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், மரங்களின் அருகாமையில் நிற்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.
கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.