தமிழ்நாடு
காலையில் கொளுத்திய வெயில்.. பிற்பகல் குளிர்வித்த கனமழை: ஜில்லென மாறிய சென்னை
- இன்று பிற்பகல் கருமேகங்கள் சூழ்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திடீரென மழை பெய்தது.
- மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச்சலனத்தின் காரணமாக கனமழை பெய்துள்ளது
அக்னி நட்சத்திர காலம் நிறைவடைந்த போதிலும் தமிழகத்தில் வெப்பம் தணியவில்லை. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், சென்னையில் இன்று சட்டென்று வானிலையில் மாற்றம் ஏற்பட்டது. இன்று பிற்பகல் கருமேகங்கள் சூழ்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திடீரென மழை பெய்தது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் கனமழை பெய்தது. வண்டலூர், பெருங்களத்தூர், தி.நகர், கிண்டி, கோயம்பேடு, நெற்குன்றம் உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்தது.
மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச்சலனத்தின் காரணமாக கனமழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவி வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.