திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும்: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
- போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு வர வேண்டும் என போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.
- வரும் 9-ந்தேதி முதல் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும்.
சென்னை:
அரசு போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 8 ஆண்டுகளாக வழங்கப்படாத அகவிலைப்படி உயர்வை வழங்க வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வருகிற 9-ந்தேதி முதல் 'ஸ்டிரைக்' நடத்த உள்ளனர்.
பொங்கலுக்கு முன்பாக இந்த ஸ்டிரைக் நடத்தப்பட உள்ளதால் பயணிகள் பாதிக்காமல் இருப்பதற்காக அனைத்து ஊழியர்களும் விடுமுறை எடுக்காமல் பணிக்கு வர வேண்டும் என்று போக்குவரத்து கழகங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் 9-ந்தேதி வேலைநிறுத்தப்போராட்டம் திட்டமிட்டப்படி நடைபெறும் என்று தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் போக்குவரத்து கழகங்களில் மொத்தம் சுமார் 1,20,000 பேர் பணியாற்றி வருகின்றனர்.
இதில் தொ.மு.ச. தவிர்த்து மற்ற பிற தொழிற்சங்கங்களான சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தயாராகி வருகின்றனர்.
இதுகுறித்து போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் கூறுகையில், பொங்கலுக்கு முன்பு எங்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி முடிவு அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் 9-ந்தேதி ஸ்டிரைக்கை திரும்ப பெறும் எண்ணம் இல்லை. நாங்கள் முறையான ஸ்டிரைக் நோட்டீசு வழங்கி விட்டோம். 4-ந்தேதியே அந்த கெடு முடிந்துவிட்டது. இருந்தாலும் 5 நாள் 'டயம்' கொடுத்து 9-ந்தேதி தான் வேலைநிறுத்தம் நடத்த இருக்கிறோம்.
எனவே பொங்கல் சிறப்பு பஸ்களை இயக்குவது பாதிக்கப்படக்கூடாது என கருதும் தமிழக அரசு தொழிற்சங்கத்தினரை அழைத்து பிரச்சனைகளை பேசி தீர்க்க முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.