தமிழ்நாடு (Tamil Nadu)

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு அதிகபட்ச வயதை 40 ஆக உயர்த்த வேண்டும்- ராமதாஸ் கோரிக்கை

Published On 2022-08-12 05:19 GMT   |   Update On 2022-08-12 10:03 GMT
  • சமூக நீதியில் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழ்நாடு திகழ்கிறது.
  • இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 45 ஆகவும் உயர்த்த தமிழ்நாடு அரசு உடனடியாக ஆணையிட வேண்டும்.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் மாவட்ட துணை ஆட்சியர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்கான வயது வரம்பு உயர்த்தப்பட வேண்டும் என்ற தேர்வர்களின் கோரிக்கை மீண்டும் நிராகரிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

முதல் தொகுதி தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். தமிழக அரசும் அதையேற்று 2018-ஆம் ஆண்டில் 2 ஆண்டுகளும், 2021-ஆம் ஆண்டில் இரு ஆண்டுகளும் வயது வரம்பை உயர்த்தியுள்ளது. ஆனால், உயர்த்தப்பட்ட வயது வரம்புக்கும், தேர்வர்கள் கோரும் வயது வரம்புக்கும் இடையிலான வித்தியாசம் மலைக்கும், மடுவுக்கும் இடையிலானது ஆகும். இந்த இடைவெளியை குறைக்க வேண்டியது தமிழக அரசின் கடமையும், பொறுப்பும் ஆகும்.

இந்தியாவில் 11 மாநிலங்களில் குரூப் 1 தேர்வுகளில் பங்கேற்பதற்கான வயது வரம்பு தமிழகத்தை விட அதிகம் ஆகும். தமிழ்நாட்டில் மட்டும் வயது வரம்பை உயர்த்த அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொடர்ந்து மறுத்து வருவது அநீதி.

சமூக நீதியில் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழ்நாடு திகழ்கிறது. அது முதல் தொகுதி தேர்வுக்கான வயது வரம்பிலும் எதிரொலிக்க வேண்டும். மாறாக, வயது வரம்பை கடைபிடிப்பதில் உறுதியைக் காட்டி, தேர்வர்களுக்கு வாய்ப்புகளை மறுக்கக் கூடாது. இதை உணர்ந்து தமிழ்நாட்டில் முதல் தொகுதி தேர்வுகளை எழுதுவதற்கான வயது வரம்பை பொதுப்பிரிவினருக்கு 40 ஆகவும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 45 ஆகவும் உயர்த்த தமிழ்நாடு அரசு உடனடியாக ஆணையிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News