தமிழ்நாடு

தமிழ்நாட்டுக்கு சுற்றுலாவுக்காக 32 கோடி பேர் வருகை- அமைச்சர் தகவல்

Published On 2024-07-07 05:17 GMT   |   Update On 2024-07-07 05:17 GMT
  • ஊட்டி படகு இல்லம், பைக்காரா படகு இல்லம் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டது.
  • தமிழ்நாட்டில் சுற்றுலா வளர்ச்சிக்காக ரூ.40 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்களை மேம்படுத்துவது மற்றும் புதிய சுற்றுலா தலங்களை கண்டறிவது குறித்து சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன், சுற்றுலாத்துறை மேலாண்மை இயக்குனர் சமயமூர்த்தி ஆகியோர் ஊட்டி படகு இல்லத்தில் ஆய்வு செய்தனர்.

பின்னர் அமைச்சர் ராமச்சந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நீலகிரியில் சுற்றுலா தலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை சுற்றுலா துறை மேலாண்மை இயக்குனருடன் இணைந்து ஆய்வு செய்யப்பட்டது.

ஊட்டி படகு இல்லம், பைக்காரா படகு இல்லம் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டது. நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிந்து விடுகின்றனர்.

ஊட்டி படகு இல்லம், தொட்டபெட்டா, பூங்காவை மட்டுமே கண்டுகளித்து செல்கின்றனர். இதனால் ஊட்டியில் கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

எனவே மாவட்டம் முழுவதும் சுற்றுலாவை பரவலாக்கும் வகையில் குன்னூர், கோத்தகிரி, மைனாலா உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா தலங்களை கண்டறிவது மற்றும் அதற்கான சாத்தியக்கூறுகள் என்ன என்பதைக் கண்டறிந்து வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும்.

தமிழ்நாட்டுக்கு 2022-2023-ம் ஆண்டில் 28 கோடி சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இந்த எண்ணிக்கை 2023-ம் ஆண்டில் 32 கோடியாக உயர்ந்துள்ளது. சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்க, மருத்துவ சுற்றுலா உள்பட பிற சுற்றுலாக்களை பிரபலப்படுத்த உள்ளோம்.

தமிழ்நாட்டில் சுற்றுலா வளர்ச்சிக்காக ரூ.40 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. மத்திய அரசிடம் சுற்றுலா மேம்பாட்டுக்காக ரூ.160 கோடி கோரப்பட்டுள்ளது. முதற்கட்டமாக எல் அண்ட் டி நிறுவனம் மூலமாக ஆய்வு நடத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News