சென்னையில் புறநகர் ரெயில் சேவை சீரானது
- பேசின்பிரிட்ஜ், வியாசர்பாடி இடையே தண்டவாளத்தில் தேங்கியிருந்த வெள்ள நீர் முழுமையாக அகற்றப்பட்டது.
- தண்டவாளங்களில் தண்ணீர் வடிந்ததால் வழக்கம்போல் சென்ட்ரலில் இருந்தே ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னையிலும் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதலே இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் காற்றுடன் தொடர்ச்சியாக மழை பெய்து வந்ததால் சில பகுதிகளில் சாலையின் அருகில் உள்ள மரங்கள் சரிந்து விழுந்தது. இதனை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்களும், தீயணைப்பு வீரர்களும் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து பெய்த கனமழையால் எழும்பூர், தாம்பரம், பேசின்பிரிட்ஜ் மற்றும் வியாசர்பாடி உள்ளிட்ட சில ரெயில் நிலையங்களில் தண்டவாளங்களில் மழைநீர் தேங்கியது. மழைநீரை மோட்டார் பம்புகள் மூலம் ரெயில்வே ஊழியர்கள் அகற்றினர்.
இந்நிலையில் பேசின்பிரிட்ஜ் மற்றும் வியாசர்பாடி இடையே தண்டவாளத்தில் தேங்கியிருந்த வெள்ள நீர் முழுமையாக அகற்றப்பட்டது.
சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும் ரெயில்கள் மாற்று ரெயில் நிலையங்களில் இருந்து இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
தண்டவாளங்களில் தேங்கியிருந்த மழைநீர் வடிந்ததால் சென்னையில் ரெயில் இயக்கம் சீரானது. வழக்கம்போல் சென்ட்ரலில் இருந்தே ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.