தி.மு.க. அரசு ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக நீதிக்காக பாடுபடக்கூடிய அரசு- கனிமொழி
- தி.மு.க. ஆட்சியில் தான் அருந்ததியருக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
- தி.மு.க. தொடர்ந்து நம் உரிமைகளுக்காக போராடி கொண்டிருக்கிறது.
நெல்லை:
நெல்லையில் சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மாவீரன் ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் வாய்ப்பை பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது தான் ஒண்டிவீரனுக்கு மணி மண்டபம் கட்டப்பட்டது. தி.மு.க. ஆட்சியில் தான் அருந்ததியருக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதை எதிர்த்து சிலர் வழக்கு போட்டனர்.
இப்போது அதை எதிர்த்து நமது முதலமைச்சர் பெரிய வெற்றியை கண்டிருக்கிறார். தி.மு.க. அரசு ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட, விளிம்பு நிலை மக்களுக்காக உழைக்க கூடிய அரசு. வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என்ற பாரபட்சம் இல்லாமல் அனைவருக்காகவும் உழைக்கக்கூடிய அரசு. ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக நீதிக்காக பாடுபடக்கூடிய அரசு.
தி.மு.க.வும், பா.ஜ.க.வும் ரகசிய கூட்டணி வைத்திருக்கிறது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார். தி.மு.க. தொடர்ந்து நம் உரிமைகளுக்காக போராடி கொண்டிருக்கிறது. அனைவருக்கும் கல்வி திட்டம், மெட்ரோ ரெயில் திட்டம் போன்றவற்றிற்கு ஒன்றிய அரசு நிதி வழங்கவில்லை.
சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட போது நிவாரணம் கேட்டு இதுவரை தரவில்லை. இதன்பிறகு அவர்களுடன் என்ன நெருக்கம் இருக்கிறது? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களோடும், மனிதர்களோடும் எளிமையாக, இனிமையாக பழகக் கூடியவர். எனினும் உரிமை என்று வருகிற போது கருணாநிதி போன்று உறுதியாக இருக்கக் கூடியவர்.
இவ்வாறு அவர் கூறினார்