திருச்சி விமான விவகாரம்- விமான ஊழியர்களிடம் அதிகாரிகள் விசாரணை
- விமானத்தில் ஹைட்ராலிக் தோல்வி ஏற்பட்டதற்கான காரணத்தை ஆய்வு செய்யுமாறு உத்தரவிடப்பட்டது.
- சென்னையில் இருந்து வந்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, விமானம் திருச்சிக்கே திரும்பியது.
141 பயணிகளுடன் திருச்சியில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்க முடியாமல் கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கும் அதிகமாக வானத்தில் வட்டமடித்த நிலையில், விமானம் பத்திரமாக தரையிறங்கியது.
இதைதொடர்ந்து, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட விவகாரம் குறித்து ஆய்வு செய்ய சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகத்திற்கு மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
மேலும், விமானத்தில் ஹைட்ராலிக் தோல்வி ஏற்பட்டதற்கான காரணத்தை ஆய்வு செய்யுமாறு உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், திருச்சி விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு தொடர்பாக வானூர்தி இயக்கக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எரிபொருளை குறைத்த பின், தரை இறக்கப்பட்டு 140 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், தொழில்நுட்ப கோளாறு தொடர்பாக விசாரிக்கப்படுகிறது.
அதன்படி, விமான பைலட், விமான ஊழியர்களிடம் சென்னையில் இருந்து வந்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பைலட் மற்றும் கண்ட்ரோல் ரூம் இடையிலான உரையாடல் குறித்த ஆடியோ பதிவை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
விசாரணையை தொடர்ந்து, டெல்லியில் உள்ள வானூர்தி இயக்கக அதிகாரிகளுக்கு அறிக்கையாக சமர்ப்பிப்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.