தமிழ்நாடு

புதிய குற்றவியல் சட்டங்களின் கீழ் திருச்சி மாவட்டத்தில் முதல் நாளில் 9 வழக்குகள் பதிவு

Published On 2024-07-02 05:11 GMT   |   Update On 2024-07-02 05:11 GMT
  • வழக்கை பொருத்தமட்டில் முன்பு இந்திய தண்டனைச் சட்டம் 174 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு வந்தது.
  • தற்போது புதிய சட்டமான பாரதிய நகரிக் சுரக்ஷா ஷன்ஹிதா 194 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

திருச்சி:

மத்திய அரசு நடைமுறையில் உள்ள இந்திய தண்டனைச் சட்டம்(ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம்(சி.ஆர்.பி.சி), மற்றும் இந்திய சாட்சிய சட்டம் ஆகிய சட்டங்களின் பிரிவுகளை வடமொழி தலைப்புகளில் பாரதிய நியாய ஷன்ஹிதா, பாரதிய நஹ்ரிக் சுரக்ஷா, பாரதிய சக்ஷய அதிநயம் என மாற்றி புதிய சட்டங்களாக கொண்டு வந்தது.

இந்த 3 சட்டங்களும் நேற்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்தன. அதன்படி தமிழகத்திலும் புதிய சட்டங்கள் அமல்படுத்தப்பட்டது. இந்த புதிய சட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வருவது தொடர்பாக ஏற்கனவே தமிழக காவல்துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து நேற்று திருச்சி மாநகரில் புதிய சட்டங்களின் கீழ் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. திருச்சி புத்தூர் பகுதியில் தன்ராஜ்(வயது 43) என்ற பெயிண்டர் குடும்ப தகராறு காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

இந்த வழக்கை பொருத்தமட்டில் முன்பு இந்திய தண்டனைச் சட்டம் 174 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு வந்தது. தற்போது புதிய சட்டமான பாரதிய நகரிக் சுரக்ஷா ஷன்ஹிதா 194 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும் அதே காவல் நிலையத்தில் குட்கா தொடர்பான வழக்கு பாரதிய நஹ்ரிக் சுரக்ஷா (பி. என். எஸ்.) புதிய சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது. புறநகர் மாவட்டத்தில் மொத்தம் 7 வழக்குகள் புதிய சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

லால்குடி காவல் நிலையத்தில் குட்கா பிடிபட்ட வழக்கில் பி.என். எஸ். புதிய சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதேபோன்று கானக்கிளியநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிராவல் மண் கடத்தல் தொடர்பான வழக்கு பி.என்.எஸ். புதிய சட்டத்தின் கீழ் பதிவு செய்தனர்

சோமரசம்பேட்டையில் குடிபோதைக்கு அடிமையான புருஷோத்தமன் வயது 65 என்பவர் மது குடிக்க குடும்பத்தினர் தடை விதித்ததால் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்த வழக்கு புதிய சட்டத்தின் கீழ் பதிவானது.

மணப்பாறை காவல் நிலையத்தில் 2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி படுகாயம் அடைந்த வழக்கு பி.என்.எஸ். புதிய சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளனர். இதே போன்று கள்ளக்குடி காவல் நிலையத்தில் 7-ம் வகுப்பு மாணவி பிரக்சா பஸ்ஸில் ஏறுவதற்கு முன்பாக டிரைவர் பஸ்சை இயக்கியதால் கீழே விழுந்து காயம் அடைந்தார் இந்த வழக்கு பி.என். எஸ்.சட்டத்தின் கீழ் பதிவானது.

மேலும் பெட்டவாய்த்தலையில் ஒரு விபத்து வழக்கும், வையம்பட்டியில் 2 மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கும் பி.என்.எஸ். புதிய சட்டத்தின் கீழ் பதிவானது.

Tags:    

Similar News