தமிழ்நாடு (Tamil Nadu)

திம்பம் மலைப்பாதையில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து

Published On 2024-09-23 06:53 GMT   |   Update On 2024-09-23 06:53 GMT
  • திம்பம் மலைப்பகுதியில் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.
  • கவிழ்ந்து கிடக்கும் லாரியை மீட்க வெகுநேரம் ஆகிவிடும் என்பதால் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.

தாளவாடி:

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதை 27 அபாயகரமான கொண்டை ஊசி வளைவுகளை கொண்டதாகும். இந்த மலைப்பாதை தமிழக-கர்நாடகாவை இணைக்கும் முக்கிய வழித்தடம் ஆகும். இந்த வழித்தடத்தில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வாகனங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் திம்பம் மலைப்பாதையில் அணிவகுத்து செல்வதால் கடந்த 2 வாரமாக திம்பம் மலைப்பாதையில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. புளிஞ்சூர் சோதனைச் சாவடியில் இருந்து பண்ணாரி சோதனை சாவடி வரை வாகனங்கள் அணிவகுத்து நின்று ஊர்ந்து செல்கின்றது.

புளிஞ்சூர் சோதணை சாவடியில் இருந்து பண்ணாரி வரை 40 நிமிடத்தில் கடக்க வேண்டிய தொலைவை தற்போது 3 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை இந்த பாதையை கடக்க முடிகிறது.

இதனால் தினம் தினம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை கர்நாடகாவில் இருந்து திருப்பூர் நோக்கி சாக்கு மூட்டைகளை ஏற்றி க்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டு சென்றது.

திம்பம் 15-வது கொண்டை ஊசி வளைவில் அந்த லாரி திரும்பிய போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் கவிழ்ந்தது. இதனால் திம்பம் மலைப்பகுதியில் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சாலையின் இருபுறங்களில் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்துநின்றன. இதனால் தமிழகம்-கர்நாடக இடையே போக்குவரத்து முடங்கியது. அதேசமயம் மோட்டார் சைக்கிள், ஆட்டோ, கார் போன்ற சிறிய வாகனங்கள் சென்றன. ஆனால் லாரி, பஸ் போன்ற வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கும் மேலாக கவிழ்ந்த லாரி ரோட்டில் அப்படியே உள்ளது.

இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த திம்பம் போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சத்தியமங்கலத்தில் இருந்து ஜே.சி.பி. எந்திரம் வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜேசிபி எந்திரம் சம்பவ இடத்திற்கு வந்து கவிழ்ந்து கிடக்கும் லாரியை மீட்க வெகுநேரம் ஆகிவிடும் என்பதால் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News