தமிழ்நாடு

ஆன்லைன் அபராதத்தை கைவிட கோரி சென்னையில் லாரி உரிமையாளர்கள் ஜூன் 6-ந்தேதி உண்ணாவிரதம்

Published On 2023-05-28 04:21 GMT   |   Update On 2023-05-28 04:21 GMT
  • நாடு முழுவதும் காலாவதியான நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்று பல முறை கோரிக்கை விடுத்தும் மத்திய அரசு இது சம்மந்தமாக நடவடிக்கை எடுக்கவில்லை.
  • லாரிகளை தடுத்த நிறுத்தி, அதிக பாரம் ஏற்றியுள்ளதாக ரூ. 40 ஆயிரம் வரை அபராதம் விதிக்கின்றனர்.

நாமக்கல்:

தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தன்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் இயக்கப்படும் லாரிகள், டிரெய்லர்கள், டேங்கர் லாரிகள், கண்டெய்னர் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதனால், செய்யாத குற்றத்திற்கு அபராதம் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. வாகனங்கள் தமிழ்நாட்டில் இயக்கப்படும் போது வேறு மாநிலத்தில் இயக்கப்படுவது போல ஆன்லைனில் அபராதம் விதிக்கப்படுகிறது.

வெளி மாநிலங்களில் இயக்கப்படும் லாரிகளுக்கு தமிழகத்தில் அபராதம் விதிக்கப்படுகிறது. போலீசார் மற்றும் மோட்டார் வாகன போக்குவரத்து அலுவலர்கள் வாகன எண்ணைக்கூட சரியாக பார்க்காமல் ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கின்றனர். இதன்மூலம் கடந்த ஓராண்டாக லாரி உரிமையாளர்களுக்கு ஏராளமான பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் காலாவதியான நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்று பல முறை கோரிக்கை விடுத்தும் மத்திய அரசு இது சம்மந்தமாக நடவடிக்கை எடுக்கவில்லை. லாரிகளில் ஓவர்லோடு தடை செய்யப்பட வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்து வந்துள்ளது.

இந்நிலையில் லாரிகளை தடுத்த நிறுத்தி, அதிகபாரம் ஏற்றியுள்ளதாக ரூ. 40 ஆயிரம் வரை அபராதம் விதிக்கின்றனர். இதை முறைப்படுத்த வேண்டும். லாரி உரிமையாளர்களின் பிரச்சினைகளை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ் நாடு முழுவதும் அந்தந்த மாவட்ட போலீஸ் எஸ்.பி மற்றும் கமிஷனர்களிடம் லாரி உரிமையாளர்கள் சம்மேளன நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

மேலும் தமிழக டிஜிபியை நேரில் சந்தித்து முறையிட்டோம். ஆனால் ஆன்லைன் அபராதம் விதிப்பது தொடர்கதையாக உள்ளது. ஆன்லைன் அபராதத்தால் லாரி உரிமையாளர்கள் மட்டுமின்றி பொது மக்களும் பாதிக்கின்றனர்.

இதனை கண்டித்து சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் வருகிற ஜூன் 6-ந் தேதி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஒன்றிணைந்து மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இதில் லாரி, டிரெய்லர், டேங்கர், மினி லாரி, மணல் லாரி, தண்ணீர் டேங்கர் லாரி உள்ளிட்ட அனைத்து சரக்கு வாகன உரிமையாளர்கள் சுமார் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துகொள்ள உள்ளனர்.

இது அடையாள உண்ணாவிரதப் போரட்டம் தான். அதன் பின்னரும் மத்திய, மாநில அரசுகள், லாரி உரிமையாளர்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவ டிக்கை எடுக்காவிட்டால், அகில இந்திய மோட்டார் டிரன்ஸ்போர்ட் காங்கிரஸ் சேர்மன் டாக்டர் சண்முகப்பா ஆலோசனையின் பேரில், காலவரையற்ற லாரி நிறுத்தப் போராட்ட த்தில் ஈடுபட உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக லாரி உரிமையாளர்கள் சம்மேளன நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. மாநில தலைவர் தன்ராஜ் தலைமை வகித்தார். சம்மேளன செயலாளர் ராமசாமி, பொருளா ளர் தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News