தமிழ்நாடு (Tamil Nadu)

சுனாமி நினைவு தினம்: குமரி மாவட்ட கடற்கரைகளில் பொதுமக்கள் மவுன ஊர்வலம்

Published On 2023-12-26 08:02 GMT   |   Update On 2023-12-26 08:02 GMT
  • பலியான 414 பேர் உடல்களும் குளச்சல் காணிக்கை மாதா ஆலய வளாக்கத்தின் அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
  • பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த கல்லறை தோட்டத்தில் மலர்கள் தூவியும், மெழுகு வர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

குளச்சல்:

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி சுனாமி பேரலை தாக்கியது. இந்திய கடல் பகுதியையும் சுனாமி விட்டு வைக்கவில்லை. இதில் தமிழகத்தின் குமரி மாவட்டம் பெரும் உயிர்சேதம் மற்றும் பொருட் சேதத்தை சந்தித்தது. சுனாமி பேரலையில் சிக்கி கடற்கரை கிராமங்கள் சின்னாபின்னமாகின.

மணக்குடி, அழிக்கால், கன்னியாகுமரி சொத்த விளை, குளச்சல் கொட்டில் பாடு, பிள்ளை தோப்பு உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் ஏராளமானோர் சுனாமியின் கோரப்பிடியில் சிக்கி உயிரிழந்தனர். கொட்டில்பாடு பகுதியில் 199 பேர் பலியாகினர். அவர்களது உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப் பட்டன. சுனாமி பேரலை தாக்கியதன் நினைவாக கடற்கரை கிராமங்களில் நினைவு ஸ்தூபிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இங்கு ஆண்டு தோறும் மீனவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன்படி 19-ம்ஆண்டு நினைவு தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) கடைபிடிக்கப்பட்டது.


இதையொட்டி கொட்டில் பாடு சுனாமி காலணியில் இருந்து மவுன ஊர்வலம் புறப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ள கல்லறை தோட்டத்தில் பிரார்த்தனை நடைபெற்றது. நினைவு ஸ்தூபியிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் புதிதாக கட்டப்பட்டுள்ள புனித அலெக்ஸ் ஆலயத்தில் 199 பேர் நினைவாக நினைவு திருப்பலி நடந்தது. ஆலய பங்குத்தந்தை ராஜ், மற்றும் பங்குத் தந்தை சர்ச்சில் உள்பட ஏராளமான ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர். ஸ்தூபிக்கு மலர் வளையம் வைத்தும், பூக்கள் தூவியும், மெழுகு வர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

சுனாமியின் போது குளச்சல் பகுதியில் பலியான 414 பேர் உடல்களும் குளச்சல் காணிக்கை மாதா ஆலய வளாக்கத்தின் அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவர்களின் நினைவாக இன்று இரவு 7 மணிக்கு உதவி பங்குத் தந்தை தலைமையில் நினைவு திருப்பலி நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து கல்லறை மந்திரிப்பு நிகழ்ச்சியும் நடைபெறும். மேலும் பலியானவர்கள் நினைவாக அந்த நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் வைத்தும், மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்படுகிறது.


இதுபோல் சுனாமியில் ஏராளமான முஸ்லிம்கள் பலியானார்கள். அவர்களின் உடல்கள் ரிபாய பள்ளி வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேபோல் 118 பேரை பலி கொண்ட மணக்குடியிலும் இன்று அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. புனித அந்திரேயா ஆலயத்தில் பங்கு தந்தை அந்தோணியப்பன் தலைமையில் நினைவு சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. பின்னர் ஆலயத்தில் இருந்து ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக 118 பேர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை தோட்டம் சென்றனர். அங்கு பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த கல்லறை தோட்டத்தில் மலர்கள் தூவியும், மெழுகு வர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

சுனாமி நினைவு தினத்தையொட்டி மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை.

Tags:    

Similar News