தமிழ்நாடு

கூகுள்-பே மூலம் ரூ.39 ஆயிரம் மோசடி- வாலிபர்கள் கைது

Published On 2024-07-12 07:54 GMT   |   Update On 2024-07-12 07:54 GMT
  • முருகன் என்பவர் வீட்டு கட்டுமானத்திற்காக சிமெண்ட் மற்றும் கம்பிகளை தனது வீட்டில் இறக்குமாறு கூறியுள்ளார்.
  • மானூர் வட்ட இன்ஸ்பெக்டர் சபாபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

நெல்லை:

பாளையங்கோட்டை, சீவலப்பேரி ரோட்டில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு டேனியல் சுந்தர் (வயது 35) என்பவர் மேலாளராக வேலை செய்து வருகிறார்.

சம்பவத்தன்று இந்த நிறுவனத்திற்கு மொபைல் மூலம் தொடர்பு கொண்ட சுண்டக்குறிச்சி மேல தெருவை சேர்ந்த முருகன் (29) என்பவர் வீட்டு கட்டுமானத்திற்காக சிமெண்ட் மற்றும் கம்பிகளை தனது வீட்டில் இறக்குமாறு கூறியுள்ளார்.

அதன்பேரில் டேனியல் சுந்தர், முருகனுடைய வீட்டில் சிமெண்ட் மற்றும் இரும்பு கம்பிகளை இறக்கி விட்டு அதற்கான பணத்தை கேட்டுள்ளார். அப்போது முருகன் உங்கள் நிறுவனத்திற்கு ஏற்கனவே பணத்தை கூகுல்-பே மூலம் அனுப்பிவிட்டதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து டேனியல் சுந்தர் நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டு கேட்டபோது பணம் எதுவும் நிறுவனத்திற்கு வரவில்லை என்று கூறியுள்ளனர். இதனையடுத்து அவர் தேவர்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் மானூர் வட்ட இன்ஸ்பெக்டர் சபாபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

அதில், சென்னை, கொராட்டூர், பாலாஜி நகர், காமக்குடி தெருவை சேர்ந்த விக்னேஷ் (30), திருவள்ளுவர் மாவட்டத்தை சேர்ந்த பைசூர் ரகுமான் (34) ஆகிய இருவரும் டேனியல் சுந்தரிடம், முருகன் போல பேசி கட்டுமான பொருட்களை வாங்கியதும், முருகனிடம், டேனியல் சுந்தர் பேசுவதாக கூறி பொருட் களுக்குரிய பணத்தை கூகுள்-பே மூலம் பெற்றுக் கொண்டதும் தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து விக்னேஷ், பைசூர் ரகுமான் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Tags:    

Similar News