ஜெயலலிதாவை அவமரியாதையாக பேசிய அன்பரசனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்- ஆர்.பி.உதயகுமார்
- அம்மாவைப் பற்றி தா.மோ.அன்பரசன் பேசியதற்கு ஒட்டுமொத்த தமிழினமே கடும் கோபத்தில் உள்ளது.
- அம்மா பேரவை தகுந்த பதிலடி கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.
மதுரை:
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் உறுப்பினர்கள் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
உறுப்பினர் அடையாள அட்டையை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.
மனிதர் புனிதர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். உருவாக்கப்பட்ட இந்த புனித இயக்கத்தை 3-ம் பெரிய இயக்கமாக உருவாக்கி, மக்களால் நான், மக்களுக்காக நான் என்று தமிழக மக்களுக்காக வாழ்ந்து இந்தியாவிலேயே முதன்மை மாநிலம் தமிழகம் தான் என்று ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை அமைச்சர் அன்பரசன் நாகூசாமல் பேசியது ஒவ்வொரு தமிழர்கள் நெஞ்சில் ஈட்டி பாய்ந்தது போல் உள்ளது.
அம்மாவைப் பற்றி தா.மோ.அன்பரசன் பேசியதற்கு ஒட்டுமொத்த தமிழினமே கடும் கோபத்தில் உள்ளது. அமைச்சர் அன்பரசன், ஜெயலலிதாவை அவமரியாதையாக பேசியதற்கு அம்மா பேரவை கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு, உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து தா.மோ.அன்பரசனை நீக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அம்மா பேரவை வலியுறுத்துகிறது.
2 கோடி தொண்டர்களின் இதய தெய்வமாக திகழும் புரட்சித்தலைவி அம்மாவை பற்றி பேசுவதை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும், தொடர்ந்து இது போன்று பேசினால் பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் ஆணையை பெற்று, அம்மா பேரவை தகுந்த பதிலடி கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.