தமிழ்நாடு

பார்த்தசாரதி கோவில் பணியாளர்களுக்கு குடியிருப்புகள்- திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்

Published On 2024-03-12 09:54 GMT   |   Update On 2024-03-12 09:54 GMT
  • கோவிலுக்கு சொந்தமான காலி இடத்தில் 6,057 சதுரடி பரப்பில் 6 பணியாளர் குடியிருப்புகள் மற்றும் பக்தர்கள் தங்கும் விடுதி ரூ.2.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.
  • நிகழ்ச்சிக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்பி.கே.சேகர்பாபு தலைமை வகித்தார்.

சென்னை:

இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களின் நலனை பாதுகாத்திடும் வகையில் அர்ச்சகர் மற்றும் பணியாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் சீருடைகள், பொங்கல் கொடை, குடியிருப்புகள், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், ஓய்வுபெற்ற அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பொங்கல் கொடை போன்ற பல்வேறு முனைப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு அவர்களின் நலன் பேணப்பட்டு வருகிறது.

2021–2022-ம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை சட்டமன்ற மானியக் கோரிக்கை அறிவிப்பில், "சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்குச் சொந்தமான காலியிடத்தில் உபயதாரர் பங்களிப்போடு ரூபாய் 2 கோடி செலவில் பணியாளர் குடியிருப்புகளும், பக்தர்கள் தங்கும் விடுதியும் கட்டப்படும்" என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில் கோவிலுக்கு சொந்தமான காலி இடத்தில் 6,057 சதுரடி பரப்பில் 6 பணியாளர் குடியிருப்புகள் மற்றும் பக்தர்கள் தங்கும் விடுதி ரூ.2.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இப்புதிய குடியிருப்பினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்பி.கே.சேகர்பாபு தலைமை வகித்தார்.

சென்னை, சிந்தாதிரி பேட்டையில் 3.73 ஏக்கர் பரப்பளவு கொண்ட மே தின பூங்கா விளையாட்டு மைதானத்தை சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு உடற்பயிற்சி மற்றும் பொழுது போக்கிற்காக மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. சிந்தாதிரிபேட்டை மே தின பூங்கா அருகிலுள்ள பள்ளிகள் மற்றும் உள்ளூர் சமூகத்தை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டு, பல்வேறு நவீன விளையாட்டு வசதிகளை வழங்குகிறது.

இவ்விளையாட்டு மைதானத்தில் இரண்டு பூப்பந்து உள்விளையாட்டு அரங்கம், 100 பார்வையாளர்கள் அமர்வதற்கான இருக்கைகளுடன் கூடிய சறுக்கு வளையம், 50 முதல் 75 வரை பார்வையாளர்கள் அமர்வதற்கு ஏற்ற குத்துச்சண்டை வளையம், பொழுதுபோக்கு மற்றும் இருக்கைகளுடன் கூடிய பசுமை பகுதிகள், 6 வலை பந்தாட்ட மைதானம், அனைத்து வயதினருக்கான நடைபயிற்சி மற்றும் ஓடுதள பாதைகள், கிரிக்கெட் மற்றும் கால்பந்து போன்ற பல்வேறு விளையாட்டுகளுக்கான மைதானம் மற்றும் பயிற்சி நோக்கத்திற்காக 3 பயிற்சி வலைகள் ஆகியவை அமைக்க திட்டமிடப் பட்டுள்ளது. மேலும், வாகனங்கள் நிறுத்துமிடம், குடிநீர், கழிப்பறைகள் மற்றும் இதர அத்தியாவசிய வசதிகளை கொண்ட மைதானமாக அமையவுள்ளது.

நிகழ்ச்சியில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவரும் அமைச்சருமான பி.கே.சேகர்பாபு , மத்திய சென்னை தயாநிதி மாறன் எம்.பி. மேயர் பிரியா, மாவட்ட செயலாளர் சிற்றரசு, பகுதி செயலாளர் மதன் மோகன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News