தமிழ்நாடு (Tamil Nadu)

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின்

Published On 2024-10-04 13:29 GMT   |   Update On 2024-10-04 13:29 GMT
  • போட்டிக்கான தொடக்க விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கியது.
  • தனிநபர் மற்றும் குழுப் போட்டிகளுக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.37 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் கடந்த மாதம் நடைபெற்றது.

இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுப் பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் என 5 வகை பிரிவாக போட்டிகள் நடத்தப்பட்டன.

மாநிலம் முழுவதில் இருந்தும் 11½ லட்சம் பேர் பங்கேற்றனர். மாவட்ட, மண்டல அளவிலான போட்டிகள் நிறைவடைந்த நிலையில் இதில் வெற்றி பெற்றுள்ள 33 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் மாநில விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டிகள் இன்று முதல் 24-ந்தேதி வரை சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் நடைபெறுகிறது. தடகளம், டென்னிஸ், பேட்மிண்டன், கபடி, சிலம்பம், பளுதூக்குதல், கால்பந்து, ஆக்கி, குத்துச்சண்டை, நீச்சல், கிரிக்கெட், கூடைப்பந்து, கைப்பந்து, கேரம், வாள்வீச்சு, செஸ், ஜிம்னாஸ்டிக்ஸ் உள்பட 36 வகையான விளையாட்டுகள் நடத்தப்படுகிறது. இந்த முறை காட்சி போட்டியாக இ-ஸ்போர்ட்ஸ் இடம் பெறுகிறது.

போட்டியில் பங்கேற்கும் அனைத்து வீரர்களுக்கும் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அணியினருடன் வரும் அலுவலர்களுக்கு டி-ஷர்ட் வழங்கப்படுகிறது. அத்துடன் அவர்களின் உணவு, தங்குமிடம் மற்றும் போக்குவரத்து செலவுகள் அவர்களின் சொந்த மாவட்டத்திலிருந்து கவனித்துக் கொள்ளப்படுகின்றன.

இந்த ஆண்டுக்கான தனிநபர் மற்றும் குழுப் போட்டிகளுக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.37 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

போட்டிக்கான தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை 5 மணியளவில் தொடங்கியது. போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற துளசிமதி, டிரிபிள் ஜம்ப் வீரர் பிரவீன் சித்ரவேல் ஆகியோர் தொடக்க விழாவில் ஜோதியை ஏந்தி சென்றனர்.

மாவட்ட வாரியாக வீரர், வீராங்கனைகள் அணிவகுப்பு நடத்தினர்.

Tags:    

Similar News