தமிழ்நாடு

ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி- லட்சக்கணக்கில் பணம் தப்பியது

Published On 2023-10-05 07:42 GMT   |   Update On 2023-10-05 07:42 GMT
  • சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வந்து அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு வீரப்பன்சத்திரம் சக்தி ரோட்டில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி அருகே அந்த வங்கியின் ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு வழக்கம் போல் பணி முடிந்ததும் ஊழியர்கள் வங்கியை பூட்டி விட்டு சென்றுவிட்டனர்.

இந்நிலையில் நள்ளிரவு 3 மணி அளவில் ஏ.டி.எம். மையத்திற்குள் நுழைந்த மர்ம நபர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து அதில் இருக்கும் பணத்தை கொள்ளை அடிக்க முயன்றுள்ளார். இதற்காக அந்த மர்ம நபர் தான் கொண்டு வந்திருந்த ஆயுதத்தால் முதலில் ஏ.டி.எம் மையத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை அடித்து உடைத்துள்ளார்.

பின்னர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்துள்ளார். இருந்தாலும் அவரால் பணத்தை திருட முடியவில்லை. இதனையடுத்து அந்த மர்மநபர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்று உள்ளார். இன்று காலை ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க வந்த வாடிக்கையாளர் ஒருவர் ஏ.டி.எம். எந்திரம் உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அவர் வீரப்பன்சத்திரம் போலீசார் மட்டும் வங்கியின் மேலாளருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். வங்கி மேலாளரும் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார்.

சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வந்து அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். இதேப்போல் மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடி நின்றது. யாரையும் கவி பிடிக்கவில்லை.

போலீசார் விசாரணையில் மர்ம நபர் நள்ளிரவில் வந்து இந்த துணிகர கொள்ளை முயற்சி ஈடுபட்டது தெரிய வந்தது. நல்ல வாய்ப்பாக பணம் கொள்ளை போகாததால் லட்சக்கணக்கில் பணம் தப்பியது.

இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News