வைகை அணையில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்
- வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
- முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 126.15 அடியாக உள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. 71 அடி உயரம் கொண்ட அணையில் பருவமழையின்போது முழு கொள்ளளவு தேக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து முதல்போக பாசனம், ஒரு போக பாசனம், 58 கிராம கால்வாய் பாசனம் ஆகியவற்றுக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேலும் மழைப்பொழிவும் குறைந்ததால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிய தொடங்கி உள்ளது.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 54.07 அடியாக உள்ளது. அணைக்கு 748 கன அடி நீர் வருகிறது. நேற்று வரை பாசனம் மற்றும் குடிநீருக்காக 769 கன அடி நீர் திறக்கப்பட்டது. கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க தண்ணீரை சேமித்து அணையின் நீர்மட்டத்தை உயர்த்த அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். அதன்படி இன்று காலை முதல் பாசனத்திற்கான தண்ணீர் நிறுத்தப்பட்டு குடிநீருக்காக மட்டும் 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 126.15 அடியாக உள்ளது. 141 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 867 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. 36 கன அடி நீர் வருகிறது. 75 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 91.84 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 25 கன அடி நீர் திறக்கப்படுகிறது.