காதலர் தினம்: சுற்றுலா தலங்களில் குவிந்த காதல் ஜோடிகள்
- காதலர் தினத்தையொட்டி மேட்டூர் அணை பூங்காவுக்கு இன்று காலை முதலே ஏராளமான காதல் ஜோடிகள் வந்தனர்.
- சேலம் அண்ணா பூங்காவிலும் காலை முதலே காதல் ஜோடிகள் அதிக அளவில் குவிந்தனர்.
சேலம்:
காதலர் தினம் இன்று உலகம் முழுவதும் உள்ள காதலர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி காதலர்கள் தங்களது காதலர்களுக்கு பிடித்ததை வாங்கி கொடுத்தும், வாழ்த்து தெரிவித்தும் காதலை பரிமாறிக்கொண்டனர். மேலும் காதலர்கள் இன்றைய பொழுதை மகிழ்ச்சியாக கழிக்க தங்களுக்கு பிடித்த சுற்றுலா தலங்களுக்கு காலை முதலே படையெடுத்தனர்.
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டிற்கு சேலம் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் காதல் ஜோடிகள் வந்தனர். இன்று காலை முதலே ஏற்காட்டிற்கு மோட்டார் சைக்கிள்களிலும், கார்களிலும், சாரையாக காதல் ஜோடிகள் வந்தனர். மேலும் காதல் திருமணம் செய்தவர்களும் அங்கு குவிந்தனர். இதனால் ஏற்காட்டில் காதல் ஜோடிகள் மற்றும் இளம் ஜோடிகள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
ஏற்காட்டில் குவிந்த காதல் ஜோடிகள் அங்குள்ள மான் பூங்கா, அண்ணா பூங்கா, படகு குழாம், சேர்வராயன் கோவில் , பக்கோடா பாயிண்ட, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், மீன் பண்ணை உள்பட அனைத்து பகுதிகளையும் ஆனந்தமாக சுற்றி பார்த்து மகிழ்ந்தனர். மேலும் முக்கியமான பகுதிகளில் நின்று செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். இதனால் கடைகளிலும் வியாபாரம் களை கட்டியதால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
சேலம் குரும்பப்பட்டியில் இயற்கை சூழலில் அனைவரையும் கவரும் வகையில், உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. இங்கு பறவையினங்கள், பாலூட்டி இனங்கள், ஊர்வன, நீந்துவன என 200-க்கும் மேற்பட்ட உயிர் இனங்கள் உள்ளன. இயற்கை சூழலில் இந்த பூங்கா உள்ளதால் காதல் ஜோடிகள் இன்று காலை முதலே அதிக அளவில் அங்கு வந்தனர்.
மேலும் வண்ணத்து பூச்சி பூங்கா, செயற்கை நீர் வீழ்ச்சிகள் முன்பும் நின்று காதல் ஜோடிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். குறிப்பாக அங்குள்ள மான்கள், பாம்புகள், குரங்குகள், மயில்கள், மற்றும் பறவையினங்களை பார்த்து மகிழ்ந்ததுடன் உற்சகாமாக பொழுதை கழித்தனர்.
காதலர் தினத்தையொட்டி மேட்டூர் அணை பூங்காவுக்கு இன்று காலை முதலே ஏராளமான காதல் ஜோடிகள் வந்தனர். அவர்கள் அங்குள்ள காவிரியில் நீராடி மகிழ்ந்தனர். தொடர்ந்து அங்குள்ள ஊஞ்சல் மற்றும் சறுக்கு விளையாட்டுகளில் ஆனந்தமாக விளையாடி மகிழ்ந்தனர். மேலும் அணையின் பவள விழா கோபுரத்தில் ஏறிய அவர்கள் அணையின் அழகையும் பார்த்து ரசித்தனர். தொடர்ந்து தங்களுக்கு பிடித்த மீன்கள் மற்றும் உணவுகளையும் வாங்கி ருசித்து மகிழ்ந்தனர்.
இதே போல சேலம் அண்ணா பூங்காவிலும் காலை முதலே காதல் ஜோடிகள் அதிக அளவில் குவிந்தனர். அவர்கள் அங்குள்ள புல் தரையில் அமர்ந்தும், செயற்கை நீரூற்று முன்பு நின்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதனால் காலை முதலே அண்ணா பூங்காவில் காதல் ஜோடிகள் கூட்டம் அலைமோதியது. இதே போல சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள தியேட்டர்களிலும் காதல் ஜோடிகள் திரண்டு தங்களுக்கு பிடித்த சினிமாக்களை பார்த்து மகிழ்ந்தனர்.