மக்கள் கோபத்தை திசை திருப்பவே மத்திய அரசு மீது அவதூறு: மு.க.ஸ்டாலின் மீது வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
- தேர்தல் நேரத்தில் ஒன்றிய அரசு என பேசாமல் ஆட்சியில் அமர்ந்ததும் ஒன்றிய அரசு என்று பிரிவினை சித்தாந்தத்தை விதைத்து வருகிறார்.
- பேரிடர் மேலாண்மை விதிகளின்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு ஏற்கனவே விடுவிடுத்துள்ளது.
கோவை:
கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த 2019 பாராளுமன்ற தேர்தல் போல மோடி எதிர்ப்பலையை கட்டமைக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவதூறு பரப்பி வருகிறார்.
முதல்-அமைச்சராக பொறுப்பேற்றது முதல் மத்திய அரசுடன் தேவையற்ற மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார்.
தேர்தல் நேரத்தில் ஒன்றிய அரசு என பேசாமல் ஆட்சியில் அமர்ந்ததும் ஒன்றிய அரசு என்று பிரிவினை சித்தாந்தத்தை விதைத்து வருகிறார்.
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி தான் பா.ஜ.க அரசின் தாரக மந்திரம். நிதி ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகளின் படியே அனைத்து மாநிலங்களுக்கும் நிதி வழங்கப்படுகிறது.
பேரிடர் மேலாண்மை விதிகளின்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு ஏற்கனவே விடுவிடுத்துள்ளது.
இதுவரை ரூ.1000 கோடி வழங்கப்பட்டுள்ளது. மழை வெள்ள பாதிப்புகளை ஆராய வந்த மத்திய குழுவின் அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு கூடுதல் நிதி வழங்கும்.
மக்களவை தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும் போது பாதிப்பு ஏற்படும் என கருதும் மாநிலங்கள் அவர்களின் கருத்துக்களை ஆதாரங்களுடன் முன்வைத்தால் பாதிப்புகளை தடுக்க முடியும் என்று தான் மத்திய நிதி மந்திரி கூறினார்.
ஆனால் இதனை வெள்ள நிவாரணத்துடன் தொடர்புபடுத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திசை திருப்பி மக்களை ஏமாற்றுவதற்காகவே மத்திய அரசு மீது அவதூறு பரப்பி வருகிறார்.
ஊழல், குடும்ப ஆட்சியின் அவலங்களால் தமிழ்நாட்டு மக்கள் தி.மு.க அரசு மீது கடும் கோபத்தில் உள்ளனர்.
அதனை திசை திருப்பி மக்களை ஏமாற்றுவதற்காகவே மத்திய அரசு மீது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திரும்ப, திரும்ப அவதூறு பரப்பி வருகிறார்.
தமிழக மக்கள் என்றும் தேசியத்தின் பக்கம் தான் என்பது வரும் மக்களவை தேர்தல் முடிவுகளில் தெரியவரும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.