வீராணம் ஏரி நீர் சுத்திகரிக்கப்பட்ட பின்னரே சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது: அதிகாரி
- இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வீராணம் ஏரி வறண்டு போனது.
- வீராணம் ஏரியில் உள்ள நீர்வாங்கி நெடுமடத்தில் இருந்து நீர் உறிஞ்சப்பட்டு நெய்வேலிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சேத்தியாத்தோப்பு:
கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக வீராணம் ஏரி விளங்கி வருகிறது. லால்பேட்டையில் அமைந்துள்ள இந்த ஏரி 14 கிலோ மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்து 5 கிலோ மீட்டர் அகலம் உடையது. வீராணம் ஏரியின் மொத்த நீர்மட்ட அளவு 47.50 அடி. அதாவது 1461 மில்லியன் கன அடி தண்ணீரை சேமிக்க முடியும். இந்த ஏரி தனது முழுக்கொள்ளவை எட்டினால், இந்த ஏரி கடல் போல் ரம்மியமாக காட்சியளிக்கும்.
உலகிலேயே மனிதர்களால் வெட்டப்பட்ட மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரிக்கு, மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கல்லணை, கீழணை வந்து வடவாறு வழியாக நீர் வருகிறது. இதுதவிர இந்த ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரியலூர், பெரம்பலூர், செந்துறை, ஆண்டிமடம், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய பகுதிகளில் பெய்யும் மழைநீரும் கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஓடை வழியாக வருகிறது.
வீராணம் ஏரியின் மூலம் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் நிலங்கள் நேரடியாகவும், 40 ஆயிரத்து 526 ஏக்கர் நிலங்கள் மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகிறது. கோடைகாலத்தில் பெரும்பாலும் இந்த ஏரியில் தண்ணீர் இருக்காது. ஆனால் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக, சென்ற ஆண்டுவரை இந்த ஏரியில் கோடை காலத்திலும் தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டது.
இவ்வாறு சேமிக்கப்படும் ஏரி நீர், ராட்சத பம்புகள் மூலம் நெய்வேலிக்கு கொண்டு செல்லப்பட்டு சேமிக்கப்படுகிறது. அங்கு ஏரி நீர் சுத்திகரிக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இது தவிர மருவாய், பின்னலூர், வடலூர், சேராக்குப்பம், கரைமேடு போன்ற இடங்களில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, அதன் மூலமும் சென்னைக்கு குடிநீர் கொண்டு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வீராணம் ஏரி வறண்டு போனது. இதனால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கல்லணையில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பாக விநாடிக்கு 1,200 கன அடி திறந்து விடப்பட்டது. இந்த நீர் கீழணைக்கு வந்தடைந்தது. தொடர்ந்து கீழணையில் இருந்து விநாடிக்கு 200 கன அடிநீர் வீராணம் ஏரிக்கு திறந்து விடப்பட்டது.
மேலும், இந்த நீர் ஓரிரு நாட்களில் வீராணம் ஏரிக்கு வந்துவிடும் என்று எதிர்பார்த்த நிலையில், ஒரு வார காலம் கழித்து வந்தடைந்தது. அதன்படி வீராணம் ஏரிக்கு 100 கன அடிநீர் வருகிறது. அவ்வாறு வந்த நீரும் பச்சை நிறத்தில் இருந்தது.
இந்த நீரானது வீராணம் ஏரியில் உள்ள நீர்வாங்கி நெடுமடத்தில் இருந்து நீர் உறிஞ்சப்பட்டு நெய்வேலிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதே போல ஏரியில் அமைக்கப்பட்ட ராட்சத ஆழ்துளை போர்வெல்லில் இருந்தும் நீரை உறிஞ்சி நெய்வேலிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சுத்திகரிக்கப்பட்ட நீரானது சென்னைக்கு அனுப்பும் பணி நேற்று முன்தினம் முதல் தொடங்கியது. அதன்படி முதல் நாள் விநாடிக்கு 10 கன அடிநீர் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அது படிப்படியாக உயர்த்தப்பட்டு விநாடிக்கு 30 கன அடி நீர் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று விநாடிக்கு 33 கன அடிநீர் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
விவசாய நிலங்களில் இருந்து வடியும் மழைநீரில், அங்கு பயன்படுத்தப்பட்ட பூச்சி கொல்லி மருந்துகளின் படிமங்கள் கலந்து, வீராணம் ஏரி நீரில் கலந்துள்ளதாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு அனுப்பும் நீர் பச்சை நிறத்தில் உள்ளது என்ற செய்தி தற்போது பரவி வருகிறது.
இதுகுறித்து வீராணம் ஏரியில் பணியில் உள்ள சென்னை மெட்ரோ குடிநீர் அதிகாரி கூறுகையில், வீராணம் ஏரி நீர் குடிப்பதற்கு உகந்ததா என்று தினமும் 3-க்கும் மேற்பட்ட முறை சோதனை செய்யப்பட்டு, ரசாயனம் ஏதும் கலக்கப்படவில்லை என்பதை உறுதி செய்த பின்னரே சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆகவே இதனால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று கூறினார்.