தமிழ்நாடு (Tamil Nadu)

வேளாங்கண்ணி ஆலய திருவிழா- பெசன்ட் நகருக்கு தினமும் 100 சிறப்பு பஸ்கள்

Published On 2024-08-30 09:29 GMT   |   Update On 2024-08-30 09:29 GMT
  • பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
  • பயணிகள் நெரிசல் மிகுந்த நேரங்களில் இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

சென்னை:

சென்னை பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலய ஆண்டு திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். இந்த திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி தினமும் சிறப்பு பிரார்த்தனைகள், சிறப்பு ஆராதனைகள், திருப்பலி நடைபெறுகிறது. இதனால் தினமும் ஏராளமான பொதுமக்கள் இந்த விழாவில் பங்கேற்க வருவார்கள்.

இதன் காரணமாக குறிப்பிட்ட நாட்களுக்கு சென்னை பெசன்ட் நகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலய ஆண்டு திருவிழாவில் பங்கேற்பதற்கு வசதியாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெசன்ட் நகருக்கு தினமும் 100-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

இது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-

பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. வருகிற 8-ந்தேதி விழா நிறைவடைகிறது. இதையொட்டி, மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் பயணிகளின் வசதிக்காக சென்னையின் பல்வேறு இடங்களிலிருந்து அன்னை வேளாங்கண்ணி ஆலய த்துக்கு வருகிற 8-ந்தேதி வரை கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

பெரம்பூர், எண்ணூர், தாம்பரம், திருவொற்றியூர், கோயம்பேடு உள்ளிட்ட பல இடங்களில் இருந்து தினமும் மாலை 4 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 100-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது. பயணிகள் நெரிசல் மிகுந்த நேரங்களில் இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இந்த நாட்களில் முக்கிய பஸ் நிலையங்களில் அலுவலர்களை நியமித்து பஸ்கள் இயக்கத்தை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

Similar News