வேங்கைவயல் வழக்கு சிபிஐ வசம் செல்கிறதா?
- விசாரணை அதிகாரியாக இருந்த திருச்சி டிஎஸ்பி பால்பாண்டி இடமாற்றம் செய்யப்பட்டு தஞ்சாவூர் சிபிசிஐடி டிஎஸ்பி கல்பனா நியமிக்கப்பட்டுள்ளார்.
- சிபிசிஐடி உயர் அதிகாரிகள் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் பட்டியல் இன மக்கள் பயன்படுத்திய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் உண்மை குற்றவாளி இன்னும் கண்டறியப்படாத நிலையில், இதுவரை 189 நபர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்பட்டு, சந்தேகத்தின் பேரில் 5 சிறுவர்கள் உட்பட 35 நபர்களுக்கு டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், புதிதாக மேலும் 10 பேரிடம் உண்மை கண்டறியும் பரிசோதனை நடத்த அனுமதி கோரி சிபிசிஐடி போலீசார் புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜெயந்தி முன்னிலையில் நடந்து வந்தது. இந்த சோதனைக்கு 10 பேரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்த மனு மீது நேற்று விசாரணை நடத்தப்பட்ட நிலையில், மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டார்.
இதற்கிடையே வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்த திருச்சி டிஎஸ்பி பால்பாண்டி இடமாற்றம் செய்யப்பட்டு தஞ்சாவூர் சிபிசிஐடி டிஎஸ்பி கல்பனா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் வேங்கைவயல் வழக்கு சிபிஐ வசம் செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக சிபிசிஐடி உயர் அதிகாரிகள் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
மறுபடியும் முதலில் இருந்து விசாரணை தொடங்கும் சூழ்நிலையில் சிபிஐ வசம் வழக்கை ஒப்படைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.