வேங்கைவயல் சம்பவம்: 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை செய்ய அனுமதி கோரி சி.பி.சி.ஐ.டி. மனு தாக்கல்
- மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இந்த வழக்கில் ஏற்கனவே ஒரு போலீஸ்காரர் உள்பட 2 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் ஏற்கனவே 38 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்பட்டதில் அதன் மாதிரி குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்ட அசுத்தத்தின் மாதிரியுடன் ஒத்துப்போகவில்லை.
இந்த நிலையில் வேங்கைவயல், இறையூர் பகுதிகளை சேர்ந்த 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் புதுக்கோட்டை எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு தள்ளுபடியானது.
தற்போது இந்த வழக்கில் அப்பகுதியை சேர்ந்த 3 பேரின் குரல் மாதிரியை பரிசோதனை செய்ய அனுமதி கோரி சி.பி.சி.ஐ.டி போலீசார் மாவட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு வருகிற 19-ந் தேதி விசாரணைக்கு வருகிறது.
மேலும் இந்த வழக்கில் ஏற்கனவே ஒரு போலீஸ்காரர் உள்பட 2 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.