விழுப்புரம் தாசில்தார் வீடுகள் உள்பட 4 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை
- தாசில்தார் சுந்தரராஜன் மீது கூறப்பட்ட புகார் நிரூபணமானது.
- காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை தொடர்ந்து நீடித்து வருகிறது.
விழுப்புரம்:
விழுப்புரம் கீழ்செட்டி தெருவில் வசித்து வருபவர் சுந்தரராஜன் (வயது 53). இவர் தற்போது செங்கல்பட்டு மாவட்ட பேரிடர் மேலாண்மை தாசில்தாராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 2015-17-ம் ஆண்டுகளில் இவர் விழுப்புரம் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக பணியாற்றியபோது உழவர் பாதுகாப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கக்கூடிய இழப்பீடு மற்றும் திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை வழங்கியதில் முறைகேடு செய்ததாக இவர் மீது புகார் கூறப்பட்டது.
இதையடுத்து கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு (லஞ்ச ஒழிப்பு போலீஸ்) விசாரணை நடத்தினர். அதில் தாசில்தார் சுந்தரராஜன் மீது கூறப்பட்ட புகார் நிரூபணமானது.
இந்த நிலையில் இன்று காலை கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார், கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையில் 4 குழுக்களாக பிரிந்து தாசில்தார் சுந்தரராஜன் வசிக்கக்கூடிய கீழ்செட்டி தெருவில் உள்ள வீடு மற்றும் அரசு ஊழியர் குடியிருப்பு, சுந்தரராஜனுடன் டேட்டா எண்டரி ஆபரேட்டராக பணியாற்றிய விழுப்புரம் செல்வராஜ் நகரை சேர்ந்த தேவிகா மற்றும் முறைகேடுக்கு இடைத்தரகராக இருந்த வளவனூர் அருகே உள்ள தாதாம்பாளையத்தை சேர்ந்த முருகன் ஆகியோரின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை தொடர்ந்து நீடித்து வருகிறது.
தாசில்தார் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ள சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.