தமிழ்நாடு

விஜய் இலவச சட்ட மையம் தொடக்கம்: கந்து வட்டி கொடுமையை முற்றிலும் ஒழிக்க வேண்டும்- புஸ்சி ஆனந்த் பேச்சு

Published On 2023-10-10 10:20 GMT   |   Update On 2023-10-10 10:20 GMT
  • இலவச சட்ட மையத்தை விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் திறந்து வைத்தார்.
  • பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் சேருவதற்கு உதவி செய்ய வேண்டும்.

சென்னை:

நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் பல்வேறு சமூக பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார்

அந்த வகையில் அன்னதானம், இரவு நேர பாட சாலை போன்ற புதிய திட்டங்களை அறிவித்து தமிழகம் முழுவதும் அந்த திட்டங்கள் சிறப்பான முறையில் நடந்து வருகிறது.

ஏழை மக்கள் நலனை கருத்தில் கொண்டு விஜய் மக்கள் இயக்கத்தில் உள்ள வழக்கறிஞர்களை கொண்ட இலவச சட்ட மையம் என்ற புதிய திட்டத்தை அறிவித்தார்.

இதையொட்டி முதல் கட்டமாக விஜய் மக்கள் இயக்கத்தினர் வடசென்னை மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பில் தலைவர் தன்ராஜ் ஏற்பாட்டில் இலவச சட்ட ஆலோசனை மையம் நேற்று மாலை தொடங்கப்பட்டது.

இலவச சட்ட மையத்தை விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் திறந்து வைத்தார். தொடர்ந்து விழாவில் புஸ்சி ஆனந்த் பேசியதாவது:-

நமது தளபதி விஜய் ஆலோசனையின்படி மக்கள் திட்டங்களை தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் மக்கள் இயக்கம் மூலம் செய்து வருகிறோம். இப்போது ஏழை பொது மக்கள் வசதிக்காக இலவச சட்ட மையத்தை தொடங்கி உள்ளோம். இந்த சட்ட மையத்தின் மூலம் குடும்பத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு முறையான சட்ட ஆலோசனை வழங்க வேண்டும். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க செய்வதும், கந்து வட்டி கொடுமையால் பாதிக்கப்படும் நபர்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கி உதவி செய்ய வேண்டும். கந்து வட்டி கொடுமயை முற்றிலும் ஒழிக்க பாடுபட வேண்டும்.

சிறுவர்-சிறுமிகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்ய வேண்டும் தனியார் நிறுவனத்தால் வங்கி கடன் வீட்டுக் கடன் வாங்கி பாதிக்கப்படுவோருக்கு சட்ட உதவியும், வரதட்சணை கொடுமை, குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் சேருவதற்கு உதவி செய்ய வேண்டும். சட்டப் படிப்பு படிக்க வரும்புவோருக்கு வழிகாட்ட வேண்டும். பொது பிரச்சினைகளுக்கு சட்ட ரீதியில் தீர்வு காண வழி வகைகள் போன்ற மக்களுக்கு பயனுள்ள விடியங்களை நம் இயக்கத்தினர் இலவச சட்ட உதவி மையத்தின் மூலம் சிறப்பாக நல்ல முறையில் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News