தமிழ்நாடு

விஜயகாந்த் பற்றி பேசும்போது கண்ணீர் விட்டு அழுத விஜய பிரபாகரன்

Published On 2024-09-15 05:48 GMT   |   Update On 2024-09-15 05:48 GMT
  • எனது வாழ்க்கை முழுவதையும் கட்சிக்காகவும், தொண்டர்களுக்காகவும் அர்ப்பணித்து விட்டேன்.
  • கேப்டன் மறைவுக்கு பிறகு அந்த கட்சி இல்லாமல் போய் விடும் என்று எண்ணினர்.

கோவை:

கோவை சிங்காநல்லூரில் தே.மு.தி.க. முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடந்தது. விழாவில் விஜயகாந்தின் மகனும், கட்சியின் இளைஞர் அணி செயலாளருமான விஜய பிரபாகரன் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசுகையில் மறைந்த தனது தந்தையை நினைத்து மேடையிலேயே கண்ணீர் வடித்தார். அதை பார்த்து அங்கு திரண்டு இருந்த தொண்டர்களும், பெண்களும் கண் கலங்கினர்.

மதுரையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை 20 ஆண்டுகளுக்கு முன்பு தலைவர் விஜயகாந்த் தொடங்கினார். கட்சிக்கு பெயர் வைக்கும் பொழுது எங்களிடம் பெயர் குறித்து விவாதித்தார். முடிவில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்று பெயர் தேர்வு செய்யப்பட்டு இன்று 20 வருடத்தை கடந்து நிற்கிறது.

இந்த மக்கள் தொண்டு என்றும் தொடரும். தே.மு.தி.க.வை நீங்கள் தூக்கி எறிந்தாலும் சுற்றில் அடித்த பந்துபோல திரும்பி வந்து மக்களுக்கு உதவி செய்து கொண்டே இருப்போம். தே.மு.தி.க. மத, இன, மொழி, பாகுபாடு பார்க்காத கட்சி.

அனைத்து மொழிகளையும் கற்றுக் கொள்வதில் தவறு இல்லை. நான் அரசியலுக்கு வந்திருப்பதால் வாரிசு அரசியல் என்று கூறுவதை ஏற்க முடியாது.

என்னை மற்ற பெற்றோர்களை போல எனது பெற்றோர்களும் நன்றாக படிக்க வைத்து வேலைக்கு அனுப்ப வேண்டும். திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். ஆனால் தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கட்சி தொண்டர்கள் என்னை கட்சி பணிக்கு அழைத்தார்கள்.

நான் எனது வாழ்க்கை முழுவதையும் கட்சிக்காகவும், தொண்டர்களுக்காகவும் அர்ப்பணித்து விட்டேன். எனது தாயார், விஜயகாந்த் உயிர் பிரியும் வரை அவரது கையை தனது கைக்குள் வைத்துக் கொண்டார்.

கேப்டன் மறைவுக்கு பிறகு அந்த கட்சி இல்லாமல் போய் விடும் என்று எண்ணினர். மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்த முயன்றனர். ஆனால் தொண்டர்கள் வியர்வை சிந்தி கட்சியை வளர்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

எனது தாயார் பிரேமலதா விஜயகாந்த், ஒரு தோளில் கட்சியையும், மறு தோளில் கேப்டனையும், எங்களையும் சுமந்துட்டு தொண்டர்களுக்காக இந்த கட்சியை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

நல்லவர்கள் லட்சியம், வெல்வது நிச்சயம். அது என்றுமே தோற்க கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் தே.மு.தி.க. மாநகர், மாவட்ட செயலாளர் சிங்கை சந்துரு உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News