தமிழ்நாடு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்- திமுக அபார வெற்றி

Published On 2024-07-13 08:35 GMT   |   Update On 2024-07-13 08:35 GMT
  • வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலையில் இருந்தார்.
  • பாமக வேட்பாளரை 69,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி திமுகவின் அன்னியூர் சிவா வெற்றி பெற்றுள்ளார்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 10ம் தேதி 276 வாக்குச்சாவடிகளில் நடைபெற்றது.

இத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா உள்பட 29 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இத்தொகுதியில் மொத்தம் 1 லட்சத்து 95 ஆயிரத்து 495 பேர் வாக்களித்துள்ளனர். இதன் வாக்குப்பதிவு சதவீதம் 82.47 ஆகும்.

இன்று காலை சரியாக 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. இதைத்தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இத்தொகுதியில் வாக்கு எண்ணிக்கை 20 சுற்றுகளாக நடைபெற்றது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலையில் இருந்தார்.

இந்நிலையில் 20 சுற்று வாக்குகள் எண்ணப்பட்டநிலையில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,25,712 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இடைத்தேர்தல் நடைபெற்ற விக்கிரவாண்டி தொகுதியில் திமுக அபார வெற்றி பெற்றுள்ளது.

எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளரை 69,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி திமுகவின் அன்னியூர் சிவா வெற்றி பெற்றுள்ளார்.

Tags:    

Similar News