மழை பெய்ய வேண்டி இறந்த கழுகுக்கு பாடை கட்டி இறுதி சடங்கு செய்த கிராம மக்கள்- பவானி ஆற்றில் அஸ்தியை கரைத்தனர்
- மழை பெய்ய வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் பல்வேறு வழிபாடுகளை செய்வது வழக்கம்.
- பரிகார நிவர்த்தி செய்யும் வகையில் கழுகுக்கு ஈமச்சடங்கு நடத்துவது என முடிவு செய்தனர்.
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பேரூராட்சிக்குட்பட்ட திம்மராயன்பாளையம், இலுப்பம்பாளையம், வச்சினாம்பாளையம், கிச்சகத்தியூர், மூலத்துறை, பழத்தோட்டம், லிங்காபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 500-க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் உள்ளன.
அங்கு அவர்கள் போதிய அளவுக்கு மழை பெய்ய வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் பல்வேறு வழிபாடுகளை செய்வது வழக்கம்.
இந்நிலையில் சிறுமுகை திம்மராயன்பாளையம் கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் மாரியம்மா என்பவரின் தோட்டத்தில் ஒரு கழுகு இறந்த நிலையில் கிடந்தது. பொதுமக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த கழுகின் உடலை பார்வையிட்டனர்.
கிருஷ்ண ஜெயந்தி அன்று விவசாய நிலத்தில் கழுகு இறந்து கிடப்பது சுற்றுவட்டாரத்தில் உள்ள 18 கிராமங்களுக்கும் நல்லது இல்லை என்று பொது மக்கள் கருதினர். எனவே இதற்கு பரிகார நிவர்த்தி செய்யும் வகையில் கழுகுக்கு ஈமச்சடங்கு நடத்துவது என முடிவு செய்தனர்.
இதையடுத்து இறந்த கழுகுக்கு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் கழுகின் உடலை எடுத்து செல்ல பாடை கட்டப்பட்டது. அதில் கழுகை வைத்து தோளில் சுமந்து ஊர்வலமாக பவானி ஆற்றங்கரைக்கு எடுத்து சென்றனர்.
அங்குள்ள ஒரு பொது இடத்தில் சாஸ்திர சம்பிரதாயபடி கழுகை எரியூட்டி வழிபட்டனர். பின்னர் கழுகின் அஸ்தி பவானி ஆற்றில் கரைக்கப்பட்டது.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சின்னராஜ் என்பவர் கூறுகையில் கருடன் (கழுகு) விளைநிலத்தில் இறந்து கிடந்தால் அதை சுற்றியுள்ள 18 கிராமங்களில் மழை பொழியாது.
இதனால் விவசாயம் பாதிக்கப்படும்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு விளைநிலத்தில் இறந்து கிடந்த கழுகுக்கு ஈமச்சடங்கு நடத்தினோம். பின்னர்தான் சுற்றுவட்டார பகுதியில் மழை பெய்து விவசாயம் செழித்தது. கிருஷ்ண ஜெயந்தி நாளில் கழுகு இறந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. எனவே கழுகுக்கு செய்ய வேண்டிய ஈமச்சடங்கு நிகழ்ச்சிகளை செய்து தரிசனம் செய்து வழிபட்டு உள்ளோம் என்று கூறினார்.