விபத்து ஏற்படும் பகுதிகளில் வரைபடம் மூலம் எச்சரிக்கை - போக்குவரத்து போலீசார் புதிய நடைமுறை
- எச்சரிக்கை பலகைகள் வாகன ஓட்டிகளின் கண்களில் சரியாக படுவதில்லை
- சென்னையில் எச்சரிக்கை வரைபடங்கள் வரையப்பட உள்ள 156 இடங்களை போலீசார் அடையாளம் கண்டறிந்துள்ளனர்.
சென்னை:
சென்னையில் வாகன பெருக்கம் காரணமாக சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன. விபத்துகளை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் சென்னையில் சாலை விபத்துகளை தடுக்க போலீசார் புதிய நடைமுறையை செயல்படுத்த தொடங்கியுள்ளனர்.
இந்த புதிய நடைமுறைப்படி சென்னையில் விபத்துகள் அதிகம் நடக்கும் பகுதிகளை போலீசார் அடையாளம் கண்டு வரைபடம் மூலம் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள். இதன் மூலம் பல விபத்துகள் ஏற்பட்டுள்ள சாலைகளில் மஞ்சள் நிறத்தில் வட்டம் போட்டு விபத்துகள் தொடர்பான விளக்க படத்தை வரைகிறார்கள். மேலும் விபத்துகள் தொடர்பாக சட்டப்பிரிவையும் அதில் எழுதி வைத்துள்ளனர்.
குறைந்த வெளிச்சத்திலும் இந்த எச்சரிக்கை வரைபடங்கள் வாகன ஓட்டிகளுக்கு நன்றாக தெரியும் வகையில் மஞ்சள் நிறத்தில் மிகவும் பிரகாசமாக இதை வரைந்துள்ளனர். இதன் மூலம் வாகன ஓட்டிகள் அந்த இடத்தில் மிகவும் கவனமாக வாகனம் ஓட்டும் வகையில் அந்த எச்சரிக்கை வரைபடம் அவர்களுக்கு நினைவூட்டுகிறது.
போக்குவரத்து போலீசார் சாலை விபத்துகளை தடுப்பதற்காக விபத்து அதிகம் ஏற்படும் பகுதிகளில் ஏற்கெனவே எச்சரிக்கை பலகைகளை பல இடங்களில் வைத்துள்ளனர்.
ஆனால் அந்த எச்சரிக்கை பலகைகள் வாகன ஓட்டிகளின் கண்களில் சரியாக படுவதில்லை. வாகன ஓட்டிகளும் அதை கவனிப்பதில்லை. இதனைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விரிவான ஆய்வுக்கு பிறகு இந்த புதிய நடைமுறையை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பல இடங்களில் ஏற்படும் விபத்துகளுக்கு சாலைகள் குண்டும் குழியுமாக மிகவும் மோசமாக இருப்பது, குறைவான வெளிச்சம் அல்லது விபத்துகள் அதிகம் ஏற்படும் இடங்களை பற்றி வாகன ஓட்டிகள் அறியாமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் உள்ளன. இந்த ஆபத்தான சாலைகளில் வரைபடங்கள் மூலம் எச்சரிக்கை செய்வதன் மூலம், வாகன ஓட்டிகள் விபத்து அபாயங்களை அறிந்து, அதற்கேற்ப கவனமுடன் வாகனம் ஓட்டும் நிலையில் விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என்று போலீசார் கருதுகிறார்கள்.
அதன் அடிப்படையிலேயே இந்த புதிய நடைமுறையை போலீசார் அறிமுகப்படுத்தி உள்ளனர். சென்னையில் இந்த எச்சரிக்கை வரைபடங்கள் வரையப்பட உள்ள 156 இடங்களை போலீசார் அடையாளம் கண்டறிந்துள்ளனர். திருவான்மியூர், சாஸ்திரி நகர், அண்ணாநகர், எல்டாம்ஸ் சாலை, கிண்டி, தி.நகர், அடையாறு மற்றும் கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட விபத்துகள் அதிகம் நடக்கும் சாலைகளில் இந்த எச்சரிக்கை வரைபடங்களை போலீசார் வரைந்து வருகிறார்கள்.