குளவி கொட்டியதில் 3-ம் வகுப்பு மாணவன் பலி
- குளவி கூட்டின் ஒரு பகுதி உடைந்து தஸ்வின் தலையில் விழுந்தது.
- கிருத்திகா, பழனிசாமி ஆகிய இருவருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வண்டலூர்:
வண்டலூர் அருகே உள்ள கீரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட முருகமங்கலம் கிராமம், முத்துமாரியம்மன் கோவில் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஆனந்தன். தொழிலாளி. இவரது மனைவி நித்யா. இவர்களது மகன் தஸ்வின்(8), மகள் கிருத்திகா (4). இவர்களில் தஸ்வின் கீரப்பாக்கத்தில் உள்ள அரசு நடுநிலை பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்த நிலையில் ஆனந்தனும், அவரது மனைவி நித்யாவும் வேலை சம்பந்தமாக வெளியில் சென்று விட்டனர்.
இதைத்தொடர்ந்து வீட்டில் இருந்த தஸ்வினும், அவரது தங்கை கிருத்திகாவும் வீட்டின் வெளியே விளையாடினர். அப்போது அங்கிருந்த பனைமரத்தில் குளவிகள் பெரிய கூடு கட்டி இருந்தது.
அந்த கூட்டின் மீது தஸ்வின் கல் வீசியதாக தெரிகிறது. மேலும் கம்பாலும் தட்டிவிட்டு விளையாடினர்.
இதில் குளவி கூட்டின் ஒரு பகுதி உடைந்து தஸ்வின் தலையில் விழுந்தது. அப்போது ஏராளமான விஷ குளவிகள் பறந்து வந்து தஸ்வின் மற்றும் அருகில் நின்று கொண்டு இருந்த கிருத்திகாவை தலை, முகம் மற்றும் உடல் முழுவதும் கொட்டின. இதில் அவர்கள் இருவரும் அலறி துடித்தனர்.
சத்தம் கேட்டு வீட்டில் இருந்த ஆனந்தனின் தந்தையான பழனிசாமியும் அங்கு வந்தார். அவரையும் குளவிகள் கொட்டின.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் குளவிகள் கொட்டியதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட தஸ்வின், அவரது தங்கை கிருத்திகா, தாத்தா பழனிசாமி ஆகிய 3 பேரையும் மீட்டு ரத்தின மங்கலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி தஸ்வின் பரிதாபமாக இறந்தான். கிருத்திகா, பழனிசாமி ஆகிய இருவருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து காயார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.