தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 40 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

Published On 2024-07-19 04:02 GMT   |   Update On 2024-07-19 04:02 GMT
  • காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
  • அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.

சேலம்:

கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து தான் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படும். 124.80 அடி கொள்ளளவு கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 116.60 அடியாக இருந்தது.

அணை நிரம்ப இன்னும் 8 அடியே பாக்கி உள்ளது. அணைக்கு வினாடிக்கு 44,617 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவை மற்றும் பாசனத்துக்காக வினாடிக்கு 2,566 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

அணைக்கு தொடர்ந்து சீராக தண்ணீர் வந்து கொண்டிருப்பதாலும் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படாததாலும், இன்னும் 3 நாட்களுக்குள் கிருஷ்ணராஜசாகர் அணை முழு கொள்ளளவை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காவிரி படுகையில் உள்ள கபினி அணை முழு கொள்ளளவை எட்டிவிட்டதால் அந்த அணையில் இருந்து தமிழகத்துக்கு நேற்று மாலை 4 மணி நிலவரப்படி வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று காலை தண்ணீர் திறப்பு அளவு சற்று குறைக்கப்பட்டு வினாடிக்கு 61,316 கன அடி வீதம் நீர் கபிலா ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இந்த அணைக்கு நீர்வரத்து 49,334 கன அடியாக உள்ளது.

இதனால் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த தண்ணீர் நஞ்சன்கூடு அருகே திருமாகூடலுவில் காவிரியுடன் சங்கமித்து தமிழகம் நோக்கி பாய்ந்தோடுகிறது.

கபினி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர் காரணமாக தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டு பகுதிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை 45 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் மாலை வினாடிக்கு 21,520 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று இரவு 35,000 கன அடியாக அதிகரித்தது. மேலும் இன்று காலையில் நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 40,018 கன அடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.

நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் நேற்று முன்தினம் மாலை 47.78 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று இரவு 51.38 அடியாக உயர்ந்தது. நீர்வரத்தை விட அணையில் இருந்து நீர் திறப்பு குறைவாக உள்ளதால் இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 55.12 அடியாக உயர்ந்தது. நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் நேற்று முன்தினம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்திருப்பதும், நேற்று காலை முதல் இன்று காலை வரை ஒரே நாளில் நீர்மட்டம் 4 அடி உயிருந்திருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும். நீர் இருப்பு 21.18 டி.எம்.சி.யாக உள்ளது.

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தமிழக எல்லையான பிலிகுண்டு முதல் மேட்டூர் வரை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி கரையோரம் வசிப்பவர்கள் மற்றும் கரையோர தாழ்வான இடங்களில் உள்ளவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், காவிரி ஆற்றை கடக்க யாரும் முயற்சிக்க வேண்டாம் எனவும் வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News