தமிழ்நாடு

சோழவரம் ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு

Published On 2023-07-18 06:44 GMT   |   Update On 2023-07-18 07:29 GMT
  • நீர்வளத்துறை உடனடியாக ஏரி பகுதிகளில் ஆக்கிரமிப்பு உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
  • பூண்டி ஏரியில் 3231 மி.கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்

சோழவரம்:

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன.

இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11,757 மில்லியன் கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இந்த நிலையில் சோழவரம் ஏரியில் இருந்து முதல் முறையாக தண்ணீர் ஆவியாவதை தடுக்க புழல் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாக நீர் வளத்துறை தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து நீர்வளத்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, சோழவரம் ஏரியில் 1081 மி.கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். ஆனால் தற்போது 95 மி.கனஅடி தண்ணீர் மட்டுமே உள்ளது.

இந்த ஏரியில் ஆண்டுதோறும் மார்ச் மாத இறுதியில் தண்ணீர் முழுவதும் வற்றிவிடும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை அதிகமாக பெய்துள்ளதால் அந்த நிலை ஏற்படவில்லை. தற்போது நீர்மட்டம் வேகமாக குறைவதால் ஆவியாவதை தடுக்க ஏரிநீர் புழல் ஏரிக்கு திறந்துவிடப்பட்டு உள்ளது என்றார்.

மேலும் இதுகுறித்து இடைநிலை நீர்வள ஆய்வுகளுக்கான தெற்காசிய கூட்டமைப்பின் தலைவர் ஜனகராஜன் கூறியதாவது:-

சோழவரம் ஏரியில் நீர்மட்டம் இவ்வளவு வேகமாக குறைவதற்கு ஏரிக்கு வரும் கால்வாய்கள் அடைபடுவதும் நீர்பிடிப்பு பகுதிகள் சுருங்கியதுமே முக்கிய காரணம். நீர்வளத்துறை உடனடியாக ஏரி பகுதிகளில் ஆக்கிரமிப்பு உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

பூண்டி ஏரியில் 3231 மி.கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போது 2064 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி.கன அடி. தற்போது 2242 மி.கனஅடி நீர் உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மி.கனஅடி. தற்போது 2361 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மி.கன அடியில் 380 மி.கனஅடி தண்ணீர் உள்ளது.

இதை வைத்து சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை 7 மாதங்களுக்கு பூர்த்தி செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News