கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் தமிழகத்திற்கு வந்தடைந்தது
- நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
- ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் பிலிகுண்டுலுவில் பரிசல் மூலம் சென்று கண்காணித்து வருகின்றனர்.
ஒகேனக்கல்:
கேரளா, கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி அணையின் நீர்வரத்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
இதனால் கபினி அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து முழு கொள்ளளவான 2284 அடியை எட்டியுள்ளது.
இதன் காரணமாக காவிரி ஆற்றில் கபினி அணையில் இருந்து உபரி நீர் வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கேரள மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 49 ஆயிரம் கனஅடி அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. இதனால் 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் தற்போது 102.35 அடியை எட்டியுள்ளது.
தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால், அதன் முழு கொள்ளளவை விரைவில் எட்டி விடும் என்பதால், அணையில் இருந்து வினாடிக்கு 2,600 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கர்நாடக-தமிழக எல்லையான பிலிக்குண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்தடையும்.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்ட உபரிநீர் நேற்று மதியம் 2 மணி அளவில் தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை கடந்து ஒகேனக்கல்லை வந்தடைந்தது.
காவிரி ஆற்றில் நீர்வரத்தானது நேற்று நிலவரப்படி விநாடிக்கு 2,500 கன அடியாக இருந்த நிலையில் படிப்படியாக உயர்ந்து நேற்று மாலை நிலவரப்படி விநாடிக்கு 5000 கன அடியாக அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 7 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்த வண்ணமாக உள்ளது. இந்த நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
தற்போது கர்நாடகா அணைகளில் இருந்து 22,600 கனஅடி அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், ஒகேனக்கல்லுக்கு மேலும் நீர்வரத்து அதிகரிக்கும். எனவே, காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் அப்பகுதிகளில் இருந்து வெளியேறவும், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும், அதேபோல சுற்றுலா பயணிகள் யாரும் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என்றும் தருமபுரி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒலிபெருக்கின் மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தப்படி சென்றனர்.
கர்நாடகா அணைகளில் மேலும் தண்ணீர் திறப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதால், இன்று திறந்து விடப்பட்ட 22,600 கனஅடி தண்ணீர் இன்று மாலைக்குள் விரைவில் ஒகேனக்கல்லுக்கு வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் பிலிகுண்டுலுவில் பரிசல் மூலம் சென்று கண்காணித்து வருகின்றனர்.