தை மாதத்தின் வளர்பிறை முகூர்த்தம்: பூ மார்க்கெட்டில் மல்லிகை கிலோ ரூ.4000
- புறநகர் பகுதிகளான பல்வேறு கிராமங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.
- பரவலாக பெய்த மழை மற்றும் கடும் பனிப்பொழிவு காரணமாக பூக்களின் வரத்தும் குறைந்து காணப்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அண்ணா வணிக வளாகத்தில் ஒருங்கிணைந்த பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு திண்டுக்கல் புறநகர் பகுதிகளான பல்வேறு கிராமங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.
பின்னர் இங்கிருந்து வியாபாரிகள் அதனை வாங்கிச்சென்று விற்பனை செய்து வருகின்றனர். கடந்த மாதம் மார்கழி என்பதால் எந்தவித திருமணம் உள்ளிட்ட விஷேச நிகழ்ச்சிகளும் நடைபெறவில்லை. மேலும் பரவலாக பெய்த மழை மற்றும் கடும் பனிப்பொழிவு காரணமாக பூக்களின் வரத்தும் குறைந்து காணப்பட்டது.
இந்நிலையில் ஒரு மாதத்திற்கு பின்பு நாளை தை மாதத்தின் முதல் வளர்பிறை முகூர்த்த நாள் வருகிறது. நாளை திருமணம் உள்ளிட்ட பல்வேறு விஷேச நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளநிலையில் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.
திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் இன்று 30 கிலோ மல்லிகை மட்டுமே விற்பனைக்கு வந்தது. இதனால் ஒரு கிலோ மல்லிகை ரூ.4000-க்கு விற்பனையானது. இதேபோல் முல்லைப்பூ ரூ.1800, ஜாதிப்பூ ரூ.1300, காக்கரட்டான் ரூ.1300, சம்பங்கி ரூ.300, அரளி ரூ.150, செவ்வந்தி ரூ.200, செண்டுமல்லி ரூ.70, கோழிக்கொண்டை ரூ.130, பட்டன்ரோஸ் ரூ.200, பன்னீர்ரோஸ் ரூ.150 என விற்பனையானது.
வழக்கமாக மார்க்கெட்டுக்கு வரும் பூக்களில் பாதிஅளவு கூட இன்று விற்பனைக்கு வராததால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்தனர். அடுத்தடுத்து முகூர்த்த நாட்கள் வர உள்ள நிலையில் பூக்களின் விலையேற்றம் சாமானிய மக்களை அதிர்ச்சி அடைய வைத்தள்ளது.