தமிழ்நாடு

லாபகரமான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் அமல்படுத்தப்படும் என நம்புகிறோம்- பி.ஆர்.பாண்டியன்

Published On 2024-02-11 09:35 GMT   |   Update On 2024-02-11 09:35 GMT
  • லாபகரமான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் சட்டம் உடனடியாக அமல்படுத்தப்படும் என எதிர்பார்த்தோம்.
  • தமிழகத்தில் இருந்தும் டெல்லியை நோக்கி விவசாயிகள் சென்ற வண்ணம் உள்ளனர்.

தஞ்சாவூா்:

தஞ்சை ரெயில் நிலையத்தில் இன்று தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

வேளாண் விரோத சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பிரதமர் அளித்த உறுதி அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது. வேளாண் விரோத சட்டம் திரும்ப பெறப்பட்டது.

இதே போல் லாபகரமான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் சட்டம் உடனடியாக அமல்படுத்தப்படும் என எதிர்பார்த்தோம். அதற்கான குழுக்களும் அமைக்கப்பட்டது. ஆனால் இது தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் மத்திய அரசு மேற்கொள்ளவில்லை.

இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய இடைக்கால பட்ஜெட்டில் பிரதமர் ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகள் இடம் பெறும். குறிப்பாக லாபகரமான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க சட்டம் இயற்றப்படும் என எதிர்பார்த்தோம். ஆனால் அப்படி ஒரு எந்த அறிவிப்பும் வெளியிடப்படாதது ஏமாற்றத்தை அளித்தது.

இந்த நிலையில் கட்சி சார்பற்ற ஐக்கிய விவசாயிகள் சங்கம் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பஞ்சாபில் இருந்து கடந்த 10 நாட்களாக லட்சக்கணக்கான விவசாயிகள் 13-ந் தேதி டெல்லிக்குள் நுழைந்து போராட்டம் நடத்துவதற்காக சென்று கொண்டுள்ளனர். நேற்று விவசாயிகளின் போராட்ட குழு ஹரியானா மாநில எல்லையை அடைந்தது.

இந்த சூழ்நிலையில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பஞ்சாபில் விவசாய அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது 8 நாட்கள் அவகாசம் வேண்டும் என்று மத்திய அமைச்சர் கேட்டார். ஆனால் விவசாயிகள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து நாளை ( திங்கள் கிழமை ) மாலை 3 மணிக்கு பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் 5-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் குழு விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதனை ஏற்றுக் தமிழ்நாடு விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நான் பங்கேற்கிறேன். இதற்காக நான் தஞ்சையில் இருந்து சென்னைக்கு ரெயிலில் சென்று அங்கிருந்து சண்டிகருக்கு செல்கிறேன். அங்கு மத்திய அமைச்சர்கள் குழு நடத்தும் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்கிறேன்.

இதில் லாபகரமான குறைந்தபட்ச ஆதார விலை, டெல்லி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறுதல், விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் இருக்கும் என நம்புகிறேன். இது ஒரு புறம் இருக்க போராட்டம் மறுபுறம் நடந்து வருகிறது. தமிழகத்தில் இருந்தும் டெல்லியை நோக்கி விவசாயிகள் சென்ற வண்ணம் உள்ளனர்.

இருந்தாலும் நாளை நடக்கும் பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News