பாலாற்றில் தடுப்பணைக் கட்டுவதை தடுக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? ஓ.பன்னீர்செல்வம், ஜி.கே.வாசன் கேள்வி
- நதிநீர்ப் பிரச்சனையில் தி.மு.க.விற்குள்ள அக்கறையின்மையை எடுத்துக் காட்டுகிறது.
- தமிழக அரசின் மெத்தனப்போக்கும், கவனமின்மையும், தமிழக விவசாயத்தில் அக்கறை இல்லாததும் தான்.
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
2006-ஆம் ஆண்டு துவக்கத்தில், ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே அணை கட்ட முயற்சி எடுத்தபோது, ஆந்திர முதல்-மந்திரிக்கு கடிதம் எழுதியதோடு, உடனடியாக பொதுப் பணித்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து விரிவாக விவாதித்து, இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 131-ன்கீழ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் அம்மா. ஆனால், இன்று தி.மு.க. ஆட்சியில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்ட 215 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதோடு, அதற்கான அடிக்கல் நாட்டு விழாவினையும் ஆந்திர முதல்-மந்திரி நடத்தியிருப்பது, நதிநீர்ப் பிரச்சனையில் தி.மு.க.விற்குள்ள அக்கறையின்மையை எடுத்துக் காட்டுகிறது. பாலாற்றின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கினை விரைவுபடுத்தி, பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டும் ஆந்திர அரசின் முயற்சியை முறியடிக்க வேண்டும்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஆந்திர அரசு, பாலாற்றில் தடுப்பணைக் கட்ட ரூ. 215 கோடி நிதி ஒதுக்கீடு செய்ததும், அடிக்கல் நாட்டியதும் கண்டிக்கத்தக்கது. குறிப்பாக பாலாற்றில் ஏற்கனவே 21 தடுப்பணைகள் கட்டப்பட்டதால் தமிழகத்தில் பாயும் பாலாற்றில் நீர்வரத்து குறைந்து வறண்ட நிலை தான் காணப்படுகிறது. இந்நிலையில் ஆந்திர அரசு மீண்டும் ஒரு தடுப்பணையைக் கட்ட முயற்சி எடுத்திருப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. பாலாற்றில் தடுப்பணைக் கட்டாமல் இருக்க தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் அம்சம் என்னாச்சு, இதற்கு முன்பு ஆந்திர அரசிடம் தடுப்பணைக் கட்டாமல் இருக்க தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிகள் என்ன, இப்போது தடுப்பணைக் கட்ட அடிக்கல் நாட்டியப் பிறகும், நிதி ஒதுக்கிய பிறகும் தமிழக அரசின் நிலை என்ன என பல கேள்விகளுக்கு பதில் என்னவென்றால் தமிழக அரசின் மெத்தனப்போக்கும், கவனமின்மையும், தமிழக விவசாயத்தில் அக்கறை இல்லாததும் தான்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.