ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் உற்பத்தியை அரசு ஏன் தடுத்து நிறுத்தக்கூடாது? -ஐகோர்ட் கேள்வி
- ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பயன்பாடு இன்னும் குறையவில்லை என்று ஐகோர்ட் கருத்து
- தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தும் நிறுவனங்களின் மின் இணைப்பு துண்டிக்கவேண்டும்
சென்னை:
தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உற்பத்தியாளர்கள் சங்கம் சீராய்வு மனு தாக்கல் செய்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றான பொருட்கள் குறித்து இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
பிளாஸ்டிக்கிற்கு பதில் மாற்று பொருட்களை பிரபலப்படுத்துவது தொடர்பான மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கையை ஐகோர்ட் பாராட்டியது. அதேசமயம், ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பயன்பாடு இன்னும் குறையவில்லை என்றும், அதன் உற்பத்தியை ஏன் நிறுத்தக்கூடாது எனவும் நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தும் நிறுவனங்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என எச்சரிக்கை வெளியிடும்படி சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளிவைத்தனர்.