கோவை-மஞ்சூர் சாலையில் அரசு பஸ், தனியார் வாகனங்களை குட்டிகளுடன் மறித்த காட்டு யானைகள்
- கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மஞ்சூர்-கோவை சாலையில் யானைகள் நடமாட்டம் இல்லாததால் வாகனங்கள் எந்தவித இடையூறும் இன்றி சென்று வந்தன.
- மழையால் வனப்பகுதி பசுமையாக மாறியுள்ளதால் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
மஞ்சூர்:
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள கெத்தை பகுதிகளில் கடந்த சில தினங்களாக 2 குட்டிகளுடன் 5 காட்டு யானைகள் சுற்றி திரிந்து வருகின்றன.
நேற்றுமுன்தினம் கோவையில் இருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் மஞ்சூருக்கு அரசு பஸ் சென்றது. இரவு 8 மணியளவில் கெத்தை அருகே பஸ் வந்தபோது, குட்டிகளுடன் வந்த காட்டு யானைகள் கூட்டம் திடீரென பஸ்சை வழிமறித்து நின்றது.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த டிரைவர் பஸ்சை மெதுவாக இயக்கி சாலையோரத்தில் நிறுத்தினார். பஸ்சில் இருந்த பயணிகளும் அச்சம் அடைந்தனர். பஸ் சாலையோரம் நிற்பதை பார்த்ததும் தனியார் வாகனங்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தது.
45 நிமிடங்களுக்கும் மேலாக சாலையில் சுற்றி திரிந்த காட்டு யானை கூட்டம் சாலையோரம் இருந்த மரக்கிளைகள், நெடுஞ்சாலை சார்பில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகையை அடித்து நொறுக்கிவிட்டு வனத்திற்குள் சென்றது. அதன் பின்னரே வாகனங்கள் அங்கிருந்து சென்றன.
நேற்று காலை மஞ்சூர் பகுதியில் கோவைக்கு சென்ற தனியார் வாகனத்தையும் மந்து என்ற இடத்தில் காட்டு யானைகள் வழிமறித்தன. நீண்ட நேரத்திற்கு பின் யானைகள் அங்கிருந்து சென்றதை தொடர்ந்து தனியார் வாகனம் புறப்பட்டு சென்றது.
கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மஞ்சூர்-கோவை சாலையில் யானைகள் நடமாட்டம் இல்லாததால் வாகனங்கள் எந்தவித இடையூறும் இன்றி சென்று வந்தன. ஆனால் தற்போது மீண்டும் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து வனத்துறையினா் கூறுகையில், அவ்வப்போது பெய்து வரும் மழையால் வனப்பகுதி பசுமையாக மாறியுள்ளதால் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக செல்ல வேண்டும். யானையுடன் புகைப்படம் எடுக்க முயற்சிக்கக்கூடாது என்றனா்.
மஞ்சூர்-கோவை சாலையில் அரசு பஸ், வாகனங்களை வழிமறித்து ஒய்யாரமாக நடந்து செல்லும் யானை கூட்டம்.